சென்னை: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, தலைமைச்செயலாளர் சிவ் தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துணை ஆணையராக இருந்த ராஜாராம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளராகவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் செயலாளராக இருந்த குமார் ஜயந்த் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஆனந்த் குமார் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குனராகவும், தொழில் துறை ஆணையராக இருந்த சுஜி தாமஸ் வைத்தியன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராகவும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக இருந்த அர்ச்சனா பட்நாயக் தொழில் துறை ஆணையராகவும், தொழில் மற்றும் வர்த்தக துறையின் சிறப்பு செயலாளராக இருந்த பூஜா குல்கர்னி உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கலை மற்றும் கலாச்சாரத்துறை ஆணையராக இருந்த பிரகாஷ் வருவாய்த்துறை கூடுதல் ஆணையராகவும், வருவாய்த்துறை கூடுதல் ஆணையராக இருந்த கலையரசி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சிறப்பு செயலாளராகவும், தமிழ்நாடு சிறு, தொழில் மேம்பாட்டு நிறுவன கூடுதல் தலைமைச் செயலாளராக விக்ரம் கபூர், ஊரக வளர்ச்சி மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக மோனிகா ராணி, சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநராக சரவணன், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக வெங்கட் பிரியா ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.