சென்னை: ரயில் ஓட்டுநர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட ரயில்வேயின் பிரதான பிரிவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அதிகாரி தெரிவித்தார். இந்திய ரயில்வேயானது 70,000 கிமீ ரயில் பாதை கொண்ட உலகின் நான்காவது பெரிய ரயில்வே அமைப்பு. ஆனால், ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறை, பணியாளர்கள் பற்றாக்குறை, போதிய பராமரிப்பு பணிகள் இல்லாமை என கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இதன் காரணமாக ரயில் தாமதங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை எப்படியாவது அட்ஜஸ்ட் செய்து கொள்ள ரயில்வே நிர்வாகம் முயற்சித்தாலும், பிரச்னை பொதுமக்களுக்கே என்பதை ரயில்வே நிர்வாகம் இன்னும் உணரவில்லை. ரயில் இருந்தால் ஓட்டுநர் இல்லை, தண்டவாளம் இருந்தால் பராமரிப்பு இல்லை, இருப்பதை வைத்து ஒப்பேத்தி விடலாம் என்று நினைக்க நிதி இல்லை.
ஒவ்வொரு பணியையும் முடிக்க, ஆண்டுகள் ஆகிறது. இதற்கு காரணம், ரயில்வே மண்டல பகுதிகளில் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுவதும் ஒரு சில மாதத்திலேயே முழுவதுமாக செலவழிக்கப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் ரயில்வே துறைக்கு குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் கொஞ்சம் கொஞ்சமாக செலவுக்கு தரப்படுவதால், அந்த நிதி ஒரு சில மாதங்களிலேயே செலவாகிவிடுகிறது. இதனால் ரயில்வே தளவாடங்களில் போதிய பராமரிப்புப் பணிகள் செய்யப்படாமல் உள்ளது. சென்னையில் மட்டும் எடுத்துக் கொண்டோமானால் வாரத்திற்கு 4 நாட்கள் புறநகர் ரயில் சேவை பாதிப்புக்குள்ளாகிறது. குறிப்பாக தெற்கு ரயில்வேயில், ஏற்பட்டுள்ள ரயில்வே பணியாளர்கள் பற்றாகுறையால், வடமாநிலத்தவர்களை ஒப்பந்த அடிப்படையில் வைத்து நாளொன்றுக்கு ரூ. 300 முதல் ரூ.500 வரை ரயில்வே பணிகள் நடைபெறுகிறது. அவர்களுக்கும் முறையாக பணம் கொடுக்கப்படாததால் வடமாநிலத்தவர்களும் அந்த வேலைக்கு வருவதில்லை. 2025-2026 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் கூட ஏறத்தாழ 95% வழித்தடங்கள் மின்சாரமயாமாகப்பட்டதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் தொடர்ந்து தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், ரயில்வே துறைகளில் ஏற்பட்டுள்ள ஆட்கள் இல்லாமையால், ரயில்வே தளவாடங்களின் பாதுகாப்பு கருவிகளை இயக்க கூட போதுமான பணியாளர்கள் இல்லை. லோகோ பைலட் பணியிடங்கள் ரயில்வே அமைச்சரின் நேரடி ஆணைப்படி 70% பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு, பயணிகளை அலைக்கழிக்கும் நிலையை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்க, மறுபக்கம் போதுமான ரயில் ஓட்டுநர்கள் இல்லாத காரணத்தால், கும்பமேளாவிற்காக ரயில்கள் இயக்க, அந்தந்த மண்டல ரயில் ஓட்டுநர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரயில்வே துறையில் 1.8 லட்சம் தொழில்நுட்ப பணியிடங்கள் உட்பட, 2.5 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக, பாராளுமன்றத்தில் ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது.
ஆனால், காலிபணியிடங்கள் குறித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தலின் பேரில் வெறும் 9000 பணியிடங்கள் மட்டும் நிரப்புவதற்கு அறிக்கை வெளியிட்டது. மீதமுள்ள பணியிடங்கள் இன்றும் கூட நிரப்பப்படாமல் உள்ளது. லோகோ பைலட்டுகளை பொறுத்தவரை,இந்திய ரயில்வேயின் அனைத்து மண்டலங்களிலும் அனுமதிக்கப்பட்ட 1 லட்சத்து 27 ஆயிரத்து 644 ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் பணியிடங்களை காட்டிலும் இந்தாண்டு நிலவரப்படி 20 ஆயிரத்து 766 காலிப் பணியிடங்கள் உள்ளது.இந்த காலிப்பணியிடம் என்பது ஒட்டுமொத்த ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர்களுக்கான பணியிடங்களில் 18.7% ஆகும்.அனைத்து மண்டலங்களிலும் உதவி ஓட்டுநர்களை விட ஓட்டுநர்களுக்கான காலிப் பணியிடம் அதிகமாக உள்ளது. அனுமதிக்கப்பட்ட 70 ஆயிரத்து 93 லோகோ பைலட்டுகளில் 14 ஆயிரத்து 429 ஓட்டுநர் பணியிடங்கள் அதாவது 20. 5% காலியாக உள்ளது. அதேபோல் அனுமதிக்கப்பட்ட 57 ஆயிரத்து 551 உதவி ஓட்டுநர்கள் பணியிடங்களில் 4 ஆயிரத்து 337 பணியிடங்கள் அதாவது 7 .5% காலியாக உள்ளது. இவை இன்னும் அதிமாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க மற்றும் ரயில் விபத்துகளை குறைக்க, நல்ல உடல் தகுதியுடன், உள்ள 65 வயதுக்குட்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்களை ரயில் லோகோ பைலட், தண்டவாள பராமரிப்பு பொறியாளர், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி தெரிவிக்கையில்: காலிபணியிடங்கள் இந்தாண்டுக்குள் நிரப்பப்படவுள்ளது. தெற்கு ரயில்வேக்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, தண்டவாள பணிகளில் ஈடுபடும் வடமாநிலத்தவர்கள் ஒப்பந்த முறையில் உள்ளனர். காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்ட பின்னர், அவர்கள் அனுப்பப்படுவர். ரயில் தாமதம் ஆங்காங்கே இருப்பது இயல்பு தான், இருந்தாலும் அவற்றை ஆராய்ந்து வருகிறோம். சென்னையில் அடிக்கடி நிறுத்தப்படும் மின்சார ரயில்கள், சிக்னலிங் பராமரிப்பு பணிக்காக தான். வரும் காலங்களில் புறநகர் ரயில் சேவையில் எந்த பிரச்ச்னையும் இல்லாமல் இருக்க பணிகள் நடைப்பெற்று வருகிறது. கும்பமேளா முடிந்த பின்னர் அந்தந்த மண்டலங்களுக்கான ரயில்கள் வந்துவிடும். இவ்வாறு தெரிவித்தார்.