சென்னை: தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று முன்னனி நிறுவனங்களில் பணிநியமனம் பெற்ற மாணவர்களுக்கும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று நடந்தது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பணிநியமன ஆணைகளை வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த ஆண்டு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐக்கள்) தொழில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்களாக மேம்படுத்தப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டன. அத்தொழில் நுட்ப மையங்களில் ஓராண்டு பயிற்சி நிறைவு செய்து முன்னணி நிறுவனங்களில் பணி நியமனம் பெற்ற 2310 மாணவர்களுக்கு பணியமர்வு ஆணை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 2ஏவில் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 156 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும் 2024-25ம் ஆண்டிற்கான சட்டப்பேரவை அறிவிப்பின்படி 32 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தொழிற்பிரிவில் உள்ள கருத்தியல் பாடங்களை எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் டிவி வழங்கப்பட்டது. 7வது மாநில அளவிலான படைப்புத் திறன் போட்டியில் வெற்றி பெற்ற 16 ஐடிஐ பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் கொ.வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் எ.சுந்தரவல்லி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.