சென்னை: நீர்வளத்துறை சார்பில் பொறியாளர்களுக்கான பட்டறை பயிற்சி கருத்தரங்கம் வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தரமணி நீர்வளத்துறை வளாகத்தில் அமைந்துள்ள அணைகள் புனரமைப்பு மற்றம் மேம்படுத்தும் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் நீர்வள ஆதாரத்துறை, வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நீர்வள பொறியியல் துறையின் மண்தன்மை பொறியியல், கட்டுமான பொருட்கள் மற்றும் காலநிலை மாறுபாடுகளை எதிர்கொண்டு மீளுதல் போன்றவற்றில் உள்ள சவால்களை எதிர்கொள்ளுதல் தொடர்பான ‘மாமழை போற்றுதும்’ மாநாட்டு கருத்தரங்கம் வரும் 12, 13ம் தேதி நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் துறையின் பொறியாளர்களுக்கான பட்டறைப் பயிற்சி கருத்தரங்கம், முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், நீர்வளத்துறை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களின் மூத்த பொறியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் மூலமாக நீர்வள பொறியியலில் சந்திக்கக்கூடிய சவால்கள் மற்றும் அவற்றை எதிர் கொள்ளுதல் தொடர்பான அனுபவ ரீதியிலான கலந்தாலோசனை மற்றும் பயிலரங்கம் நடைபெறுகிறது.
அதேபோல் பொறியியல் இளங்கலை, முதுகலை, முனைவர் பயிலும் பல்வேறு பொறியியல் கல்லுாரிகளின் மாணவர்களிடமிருந்து புவி தொழில்நுட்ப பொறியியல், கட்டுமானப் பொருட்கள், செயற்கை நுண்ணறிவு, காலநிலை மீள்தன்மை போன்ற தலைப்புகளில் மாநாட்டில் தொழில்நுட்ப கட்டுரைகள் மற்றும் விளக்கக்காட்சிகள் கருத்தரங்க மன்றத்தில் விவாதிக்கும் பொருட்டு சமர்ப்பிக்க கோரப்பட்டுள்ளது. இது பொறியியல் மாணவர்களின் கூர்ந்தாய்வு மேற்கொள்ளும் திறனை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் கருத்தரங்கமாகும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த தொழில்நுட்ப கட்டுரைக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது.