*கொடைக்கானல் விவசாயிகளை ஊக்குவிக்க கோரிக்கை
கொடைக்கானல் : காஷ்மீரை போல கொடைக்கானல் மேல்மலை கவுஞ்சி மலைக்கிராமத்தில் ஆப்பிள் சாகுபடி செய்து அசத்தும் விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. குளிர் பிரதேசமான கொடைக்கானல் மலைப்பகுதியில் காலநிலைக்கு ஏற்றவாறு மலை காய்கறிகள், பழவகைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்தியாவை பொறுத்தவரை ஜம்மு காஷ்மீர், இமாச்சல், உத்தரகாண்ட் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தான் அதிகளவில் ஆப்பிள் சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையில் நீலகிரி, கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆப்பிள் விவசாயம் அரிதாக நடந்து வருகிறது. அதாவது கடல் மட்டத்தில் இருந்து 2500 அடி முதல் 5200 அடி உயரம் வரை ஆப்பிள் சாகுபடி பெருமளவில் செய்யப்படுகிறது.
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் ஒன்றான கவுஞ்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிள் சாகுபடி தொடர்பாக 10க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், ஒரு சில விவசாயிகள் மட்டும் ஆப்பிள் மரங்களை நடவு செய்து, பராமரித்து வருகின்றனர்.
தற்போது இந்த மரங்களில் ஆப்பிள் விளைச்சல் அமோகமாக உள்ளது. எனவே தோட்டக்கலைத்துறையினர் ஆப்பிள் விவசாயத்திற்கான திட்டங்கள், மானியங்களை வழங்கி மலைக்கிராம விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.