சென்னை: ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது: இந்திய ரயில்வே என்பது ஏழை – நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! இன்று (நேற்று) காட்பாடி செல்ல ரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்களும் – குறைந்து வரும் சாதாரண வகுப்பு பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியை களவாடியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் ஆகியோருக்கு மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது…
ஏசி பெட்டிகள் உயர்த்த வேண்டும் என்பதற்காக சாதாரண வகுப்பு பெட்டிகளை குறைக்க வேண்டாம். ரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம். ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தர குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.