நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழையால் மண் சரிவு ஏற்பட்டு அவ்வப்போது ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் – திருவனந்தபுரம் ரயில் பாதையில் குழித்துறை அருகே தண்டவாளத்தையொட்டி இருந்த மரம் முறிந்து விழுந்து உயரழுத்த மின் கம்பிகள் அறுந்து தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதே பகுதியில் தண்டவாளத்தில் மண் சரிவும் ஏற்பட்டது.
இந்த சம்பவம் நடந்த போது குருவாயூர் எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து புறப்பட தயார் நிலையில் இருந்தது. தகவல் அறிந்ததும் நிறுத்தப்பட்டது. மங்களூர் – எரநாடு எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரம் – நாகர்கோவில் இடையே நேற்று முன்தினம் இரவு ரத்து செய்யப்பட்டது. மீட்பு குழுவினர் சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி அறுந்து மின் கம்பிகளை சரி செய்தனர். மண் சரிவும் சரி செய்யப்பட்டது. இதையடுத்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. நேற்று காலையில் இருந்து வழக்கம் போல் ரயில் போக்குவரத்து தொடங்கியது.