ஜோலார்பேட்டை: ரயிலில் சிக்கி கணவன் இறந்த துக்கத்தில் இருந்த தாய், மகள் விஷம் குடித்து குடும்ப புகைப்படத்தை பார்த்தபடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில், சந்தை கோடியூர், பாதர்கேசு ரோடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்தவர் குகநாதன் மனைவி கற்பகம்(42). சில ஆண்டுகளுக்கு முன்பு பியூட்டி பார்லர் நடத்தியுள்ளார். இவரது கணவர் குகநாதன் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது குகநாதன் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளார். இவர்களது மகள் சுபிக்ஷா(16) பிளஸ்2 முடித்துவிட்டு வீட்டிலிருந்து வந்தார். குகநாதன் இறந்ததிலிருந்தே கற்பகமும், சுபிக்ஷாவும் விரக்தியில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் அரளி விதையை மிக்சியில் அரைத்து குடித்துள்ளனர். பின்னர் குகநாதன், கற்பகம், சுபிக்ஷா ஆகிய 3 பேரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை எடுத்து மேசையின் மீது வைத்துவிட்டு அதை பார்த்தபடி, மின்விசிறியில் ஆளுக்கு ஒரு இடத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளனர். நேற்று முன்தினம் மதியம் முதல் வீடு திறக்காத நிலையில், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.