நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கிடையே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். பயணிகளிடையே சில கடத்தல்காரர்களும், தங்கம், வெள்ளி மற்றும் கஞ்சா, அபின், மெத்தபெட்டமைன் போன்ற போதை வஸ்துக்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை சட்டவிரோதமாக கடத்திச் செல்கின்றனர். ஹவாலா பணம் கடத்தலும் நடக்கிறது.
இதையெல்லாம் கண்காணித்து பிடிக்கும் பணியில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில்களில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்படும் விலையுயர்ந்த தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, அந்தந்த பகுதியில் உள்ள வணிக வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர். அவர்கள், உரிய விசாரணை நடத்தி அந்த பொருட்களுக்கு வரி விதிப்பதுடன், அபராதமும் வசூலிக்கின்றனர். கடத்தல் தொடர்பாக ஆர்பிஎப் போலீசில் தனியாக வழக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கஞ்சா, அபின், மெத்தபெட்டமைன் போன்ற போதை பொருட்களை கடத்தி வரும் நபர்கள் மீது வழக்கு பதிந்து, அப்பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்றம் மூலம் அழிக்கின்றனர்.
அந்தவகையில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழ்நாடு, கேரளாவில் கடந்த நிதியாண்டில் (2023-24) மட்டும் பல்வேறு ரயில்களில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ.170 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களையும், போதை வஸ்துகளையும் ஆர்பிஎப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனை கடத்தி வந்த 303 பேரையும் கைது செய்துள்ளனர். இதில், சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து அதிகப்படியான அளவு தங்க நகைகள், ரயிலில் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறது.
பிடிபட்ட தங்க நகை, வெள்ளி பொருட்களை வணிக வரி மற்றும் மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை (ஜிஎஸ்டி) அதிகாரிகளிடம் ஆர்பிஎப் போலீசார் ஒப்படைத்துள்ளனர். அவர்கள், அந்த பொருட்களுக்கு உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்களிடம் பெற்று, வரி மற்றும் அபராதத்தை வசூலித்துள்ளனர். இதுபற்றி ஆர்பிஎப் அதிகாரிகள் கூறுகையில், ‘‘ரயில்களில் சந்தேகப்படும் படி பெரிய அளவிலான சூட்கேஸ் மற்றும் இதர லக்கேஜ்களை எடுத்துச் செல்லும் நபர்களை கண்காணித்து பிடித்து பரிசோதனை செய்கிறோம்.
அந்தவகையில் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்படும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி பொருட்களையும், போதை வஸ்துகளையும் பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை-திருச்சி, சென்னை-கோவை, பெங்களூரு-சேலம்-கோவை மார்க்கத்தில் செல்லும் ரயில்களில் இத்தகைய பொருட்கள் அதிகளவு சிக்கியுள்ளது. அரசுக்கு வரி செலுத்தாமல் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தங்க நகையை எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு, ரயில்களில் பயணித்த பலரும் சிக்கியுள்ளனர்.
கடந்த நிதியாண்டில் இப்படி பிடிபட்ட 303 பேரில் பெரும்பாலானவர்கள், பல்வேறு நகைக்கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள். ஆர்டரின் பேரில் தங்க நகை செய்யும் ஆலைகளில் இருந்து, அரசுக்கு வரி ஏதும் செலுத்தாமல் சட்டவிரோதமாக நேரடியாக நகைக்கடைக்கு அப்பொருட்களை எடுத்துச் சென்று சிக்கியிருக்கின்றனர். இதனால், குறிப்பிட்ட சில ரயில்களில் தொடர் சோதனை நடத்தி, சட்டவிரோத கடத்தல்களை தடுக்கிறோம். இதற்காக ஆர்பிஎப் குற்றப்பிரிவு போலீசில் தனிப்படைகளும் அமைக்கப்பட்டு சோதனையிடப்படுகிறது,’’ என்றனர்.
* கஞ்சா, அபின், மெத்த பெட்டமைன் போன்ற போதை பொருட்களை கடத்தி வரும் நபர்கள் மீது வழக்கு பதிந்து, அப்பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்றம் மூலம் அழிக்கின்றனர்.