Tuesday, July 15, 2025
Home செய்திகள்Showinpage ரயில் கட்டணம் குறைவாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கண்துடைப்பு; குறைந்த கட்டண உயர்வு என்று தம்பட்டம் அடிக்கிறது பாஜக: சு.வெங்கடேசன் எம்.பி

ரயில் கட்டணம் குறைவாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கண்துடைப்பு; குறைந்த கட்டண உயர்வு என்று தம்பட்டம் அடிக்கிறது பாஜக: சு.வெங்கடேசன் எம்.பி

by Ranjith

மதுரை: ரயில் கட்டணம் குறைவாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கண்துடைப்பு எனவும் குறைந்த கட்டண உயர்வு என்று தம்பட்டம் அடிக்கிறது பாஜக என சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம் செய்துள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளில் 130 கோடி பயணிகள் குறைந்துள்ளனர். ஆனால் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது. காரணம், தட்கல், பிரீமியம் தட்கல், டைனமிக் கட்டணம் ஆகியவற்றுக்கு 30 சதமானம் படுக்கை வசதிகள் ஒதுக்கப்படுகின்றன. 500 ரூபாய் டிக்கெட் 3000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கி மீ க்கு ஒரு பைசா உயர்வு என்பதல்ல… 130 கோடி பேரை ரயில் பயணத்திலிருந்து வெளியேற்றியது தான் பாஜகவின் சாதனை.

இன்று முதல் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறைந்த கட்டண உயர்வு என்று தம்பட்டம் அடிக்கிறது பாஜக. புறநகர் பயண கட்டணமும் சீசன் டிக்கெட் கட்டணமும் உயரவில்லை. இரண்டாம் வகுப்பு சாதாரண வண்டிகள் 500 கிலோ மீட்டர் வரை கட்டண உயர்வு இல்லை. 501 க்கு மேல் 1500 வரை ஐந்து ரூபாய் உயர்வு. இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி சாதாரண வண்டிகளில் ஒரு பயண கிலோமீட்டருக்கு அரை பைசா கட்டண உயர்வு.

மெயில் எக்ஸ்பிரஸ் வண்டிகளில் குளிர்சாதனம் இல்லாத பெட்டிகளில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி முதல் வகுப்பு ஆகியவற்றுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்வு. குளிர்சாதன வகுப்புகளில் இருக்கை வசதி மூன்றடுக்கு வசதி படுக்கை வசதி இரண்டு அடுக்கு படுக்கை வசதி முதல் வகுப்பு படுக்கை வசதி ஆகியவற்றுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு இரண்டு பைசா உயர்வு. தேஜஸ், வந்தே பாரத், சதாப்தி, அந்தியோதயா உள்ளிட்ட சிறப்பு வண்டிகளிலும் இந்த கட்டண உயர்வு இரண்டு பைசா உயர்வு பொருந்தும்.

முன்பதிவு அதிவிரைவு வண்டி மேல் வரி ஆகிய கட்டணங்களில் மாற்றம் இல்லை. ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. உண்மை நிலவரம் என்ன என்பது புள்ளிவிவரங்களை பார்த்தால் புரியும். 2024- 25ல் குளிர்சாதன மற்றும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி உள்ளிட்ட உயர் வகுப்புகளில் 81 கோடி பேர் பயணம் செய்தார்கள். முன்பதிவு இல்லாமல் 634 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். மொத்தம் 715 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் மூலம் 75 ஆயிரத்து 457 கோடி ரயில்வே வருமானம் ஈட்டி உள்ளது.

80 ஆயிரம் கோடி வருமானம் வரும் என்று நிதிநிலை அறிக்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2017 -18 இல் முன்பதிவு பெட்டிகளில் 65 கோடி பேரும் முன்பதிவு இல்லாமல் 759 கோடி பேரும் மொத்தம் 824 கோடி பேர் பயணம் செய்தனர். 2018 -19ல் முன்பதிவு செய்தவர்கள் 68 கோடி.முன்பதிவு இல்லாமல் பயணம் செய்தவர்கள் 778 கோடி மொத்தம் 846 கோடி. 2018 -19 இல் 846 கோடி பேர் பயணித்துள்ளனர். கட்டண வருமானம் 45 ஆயிரம் கோடி. 2024- 25ல் பயணிகளின் எண்ணிக்கை 715 கோடியாக குறைந்துவிட்டது. கிட்டத்தட்ட 130 கோடி பயணிகள் குறைந்துவிட்டனர்.

ஆனால் வருமானம் 45 ஆயிரம் கோடியில் இருந்து 75,000 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் ரகசியம் என்ன? முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை 68 கோடியில் இருந்து 81 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் முன்பதிவு செய்யாத பயணிகளின் எண்ணிக்கை 778 கோடியில் இருந்து 634 கோடியாக குறைந்துள்ளது. இந்த வருமானம் எப்படி அதிகரித்தது தட்கல் பிரீமியம் தட்கல், டைனமிக் கட்டணம் ஆகியவற்றுக்கு ஒவ்வொரு பெட்டியிலும் 30 சதமானம் படுக்கை வசதிகள் ஒதுக்கப்படுகின்றன. 500 ரூபாய் டிக்கெட் 3000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வந்தே பாரத் சதாப்தி அந்தியோதயா என்ற வகைகளில் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல பயணத்தை ரத்து செய்தால் காத்திருப்போர் பட்டியலில் இருந்தாலும் இடம் கிடைத்திருந்தாலும் 65 ரூபாய் முதல் 190 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.634 கோடி பயணிகளாக குறைய காரணம் இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லா பெட்டிகள் குறைத்தல் சாதாரண பயணி வண்டிகள் ரத்து செய்தல் ஆகிய காரணங்களால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் பயணிகள் எண்ணிக்கை குறைந்த போதும் வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைவானவர்கள் அதிகமாக கசக்கி பிழியப்பட்டுள்ளார்கள். குறைவானதிலிருந்து அதிகம் கரத்தல்( more from less)என்ற தத்துவம் பின்பற்றப்படுகிறது.

மூத்த குடிமக்களுக்கான பயண சலுகை ரத்து செய்வதன் விளைவாக12கோடி பயணிகள் ரயில் பயன்பாடு குறைந்துள்ளது. அதே நேரத்தில் இரும்புத்தாது நிலக்கரி போக்குவரத்தை பயன்படுத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு 10% முதல் 20% வரை சலுகை கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல நிச்சயிக்கப்பட்ட எடைக்குமேல் அதிகமாக சரக்கு ஏற்றி சென்றால் அதற்கு ஒரு சரக்கு பெட்டிக்கு 5000 ரூபாய் அபராதம் பாதுகாப்பு காரணங்களுக்காக விதிக்கப்பட்டது. அதையும் ரத்து செய்து விட்டார்கள்.

ஆனால் பயணிகளுக்கு கட்டண உயர்வு மூத்த குடிமக்கள் சலுகை கட்டணம் ரத்து. 55 சலுகை கட்டணங்கள் இருந்ததை 23 ஆக குறைத்து விட்டார்கள். இதன் விளைவாக 135 கோடி பயணிகள் ரயில் தடத்திலிருந்து சாலைக்கு துரத்தப்பட்டுள்ளார்கள். இது தேச நலனுக்கு எதிரானதாகும். சாலையில் அதீத விபத்துகளும் அதீத எரிபொருள் பயன்பாடும் அதனால் ஏற்படும் அந்நிய செலாவணி இழப்பும் காற்று மாசுபடுவதும் ஏற்படுகிறது.

அதனால் தான் ரயில் எரிபொருள் குறைவு காற்று மாசு குறைவு அன்னிய செலாவணி அதிகம் பயன்படுத்தும் நிலை மட்டு படுகிறது. எனவே ரயில் போக்குவரத்து தான் தேச நலனுக்கு நல்லது என்று பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் இப்படி மறைமுக கட்டண உயர்வுகள் மூலம் பயணிகளை சாலைக்கு துரத்துவது என்பது தேச நலனுக்கு விரோதமான தாகும். இப்படி பலவிதமான கட்டண உயர்வுகள் மூலம் 75 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டுகிற ரயில்வே கண் துடைப்புக்காக குறைந்த கட்டண உயர்வு என்பதை ஏற்க முடியாது.

இதன் மூலம் அதன் கட்டண கொள்ளையை மூடி மறைக்கவும் முடியாது. மக்கள் மிக நன்றாக இந்த அரசாங்கத்தை புரிந்து வைத்துள்ளார்கள். இந்த கட்டண உயர்வு எனவே ஒரு கண் துடைப்பாகும். அதே போல ஏற்கனவே நடக்கும் கட்டண கொள்ளையை மூடி மறைப்பது ஆகும். அதோடு படிப்படியாக கட்டணம் உயர்த்தப்படும் என்ற ரயில்வே இணை அமைச்சரின் எச்சரிக்கையும் கவனத்தில் கொள்ளத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi