சென்னை: ஏசி, ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பிற்கான ரயில் கட்டண உயர்வு நாடு முழுவதும் நேற்று முதல் அமலுக்கு வந்தது. ரயில் கட்டணம் பல்வேறு காலக்கட்டங்களில் ரயில்வே நிர்வாகத்தால் ஒன்றிய அரசின் ஒப்புதலுடன் உயர்த்தப்பட்டுள்ளன. 2013ம் ஆண்டு கிலோமீட்டருக்கு இரண்டு பைசா முதல் 10 பைசா வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. 2020ல்மீண்டும் கட்டணத்தை அதிகரித்தது. இதன் பின்னர் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது ரயில்வே கட்டணத்தை சிறிது உயர்த்தியுள்ளனர்.
இந்நிலையில் 500 கிலோ மீட்டருக்கு மேல் பயணிப்பவர்களுக்கு ரயில் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, முன்பதிவு செய்யாமல் சாதாரண பெட்டிகளில் 501வது கிலோ மீட்டரில் இருந்து 1500 கிலோமீட்டர் வரை பயணிக்கும் பயணிகளுக்கு கட்டணம் ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 1501 கிலோமீட்டர் இருந்து 2500 கிலோமீட்டர் வரையில் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 2501 கிலோ மீட்டரில் இருந்து 3000 கிலோமீட்டர் வரை பயணிக்கும் பயணிகளுக்கு ரயில் கட்டணம் ரூ.15 உயர்ந்துள்ளது.
இதில், சாதாரண படுக்கை வசதியில் பயணிப்பவர்களுக்கு சென்னை – மதுரை ரூ.320, சென்னை – திருச்சிக்கு ரூ.249, சென்னை – கோவைக்கு ரூ.330, சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.402, சென்னை – நெல்லைக்கு ரூ.402, சென்னை – கன்னியாகுமரிக்கு ரூ.423, சென்னை – நாகர்கோவில் ரூ.433, சென்னை – சேலம் ரூ.259, சென்னை – பெங்களூரு ரூ.269 உயர்த்தப்பட்டுள்ளன. அதேபோல், ஏசி பெட்டியில் மூன்றாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு பயணிக்க சென்னை – நெல்லை ரூ.1053, சென்னை – நாகர்கோவில் ரூ.1125 ஆக உயர்ந்துள்ளது.
குளிர்சாதன வசதி இல்லாத மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு 500 கிலோமீட்டருக்குள் பயணித்தாலும் கட்டணம் உயர்வு கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டுள்ளது. மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி வசதி உடைய பெட்டிகளில் பயணம் செய்வதற்கு கிலோமீட்டருக்கு இரண்டு பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட ரயில் கட்டணம் ராஜதானி, சதாப்தி, வந்தே பாரத், அந்தியோதயா உள்ளிட்ட பல்வேறு உயர்வகுப்பு மற்றும் சிறப்பு ரயில்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.