கும்மிடிப்பூண்டி: சென்னை – சூளூர்பேட்டை செல்லும் மின்சார ரயிலில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திர மாநிலத்திற்கு சாலை மார்க்கமாகவும், ரயில் மார்க்கமாகவும் தினந்தோறும் ரேஷன் அரிசியை சென்னை, திருவொற்றியூர், மீஞ்சூர், பொன்னேரி, பஞ்செட்டி, செங்குன்றம், சோழவரம், பெரியபாளையம், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து கடத்துவதாக கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், நேற்று வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி உள்ளிட்டோர் கும்மிடிப்பூண்டி பைபாஸ், எளாவூர் சோதனைச் சாவடி, கும்மிடிப்பூண்டி பஜார், சத்தியவேடு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். இதைத் தொடர்ந்து, சென்னையிலிருந்து சூளூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்களை சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து ஒவ்வொரு பெட்டிகளாக ஏரி சோதனை மேற்கொண்டனர். அப்போது, கேட்பாரற்று கிடந்த சுமார் 2 டன் ரேஷன் அரிசியை அதிரடியாக பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த ரேஷன் அரிசி பஞ்செட்டி பகுதியில் உள்ள உணவுப் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இரவு, பகலாக ரேஷன் அரிசி கடத்துவதை வட்ட வழங்கல் அதிகாரிகள் கண்காணித்து வருவதாக தெரிவித்தனர்.