சென்னை: ஓடும் ரயிலில் பெண் மென்பொறியாளரை கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சென்னை ஓ.எம்.ஆர் பகுதியில் தங்கியிருந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவின் பாலக்காட்டில் இருந்து சென்னை வந்த விரைவு ரயில் ஐடி நிறுவனத்தில் பணி புரியும் கரூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் S9 பெட்டியில் பயணம் செய்துள்ளார். அந்த விரைவு ரயில் 26ம் தேதி அதிகாலை 2 மணியளவில் காட்பாடி ரயில் நிலையத்தை நெருங்கியுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஐடி பெண் ஊழியரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு ஓடியதாக கூறப்படுகின்றது.
அந்த நபரை பெண் விரட்டி சென்ற நிலையில், தயாராக கழிவறை கதவை திறந்திருந்த ஒரு நபர் அந்த இளம்பெண்ணை உள்ளே இழுத்து தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது. அந்த நபரை தொடர்ந்து செல்போனை பறித்து சென்ற நபரும் கழிவறைக்கு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்து விட்டு ஓடும் ரயிலில் இருந்து தப்பி சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது. தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட அப்பெண் சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக பெண்களுக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பெண் பயணி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில், சென்னை ஓ.எம்.ஆர் பகுதியில் தங்கியிருந்த கிஷோர் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கிஷோர், ஈரோட்டில் இருந்து சென்னை செல்வதற்காக காத்திருந்தபோது ரயிலை தவறவிட்டுள்ளார். பின்னர் பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் ஏறியபோது ஐ.டி. பெண் ஊழியரை பார்த்த கிஷோர், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. கிஷோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.