புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் முக்கிய குழுவிற்கு பாகிஸ்தான் தலைமை தாங்க உள்ள நிலையில் நமது வெளியுறவு கொள்கை சரிந்துவிட்டதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 2025ம் ஆண்டுக்கான ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலிபான் தடைகள் குழுவிற்கு பாகிஸ்தான் தலைமை தாங்க உள்ளது. மேலும் 15 நாடுகளை கொண்ட ஐநா அமைப்பின் தீவிரவாத எதிர்ப்பு குழுவின் துணை தலைவராகவும் பாகிஸ்தான் இருக்கும். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன்கேரா தனது எக்ஸ் தள பதிவில், ‘‘மே 9ம் தேதி ஆபரேஷன் சிந்தூரின்போது சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது. ஆபரேஷன் சிந்தூர் முடிந்த உடனேயே உலக வங்கியானது பாகிஸ்தானுக்கு 40பில்லியன் அமெரிக்க டாலரை வழங்குவதற்கு முடிவு செய்தது.
அதேபோல் ஏடிபி பாகிஸ்தானுக்கு 800மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது. ஜூன் 4ம் தேதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலிபான் தடைகள் குழுவின் தலைவராகவும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீவிரவாத எதிர்ப்பு குழுவின் துணை தலைவராகவும் பாகிஸ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டது. இது நிச்சயமாக நமது சொந்த வெளியுறவு கொள்கை சரிவின் சோகமான கதையாகும். ஆனால் பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நடவடிக்கையை தொடர்ந்து நியாயப்படுத்துவதை உலக சமூகம் எவ்வாறு அனுமதிக்க முடியும்?” என்று குறிப்பிட்டுள்ளார்.