வானூர்: தகாத உறவு பிரச்னையில் பெண் அதிகாரியை கொலை செய்து விட்டு வங்கி விற்பனை மேலாளர் வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் கோபிநாத்(37). இவர் கரூர் வைசியா வங்கியின் மரக்காணம் கிளையில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் புதுச்சேரி லாஸ்பேட்டையில் மனைவி சந்திரபிரீத்தியுடன் வசித்து வந்துள்ளார். இதேபோல், கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்தவர் மதுரா ஓ பாட்னிஸ் (36).
இவர் புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள கரூர் வைசியா வங்கியில் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் புதுச்சேரியை சேர்ந்த முந்திரி வியாபாரி சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கோபிநாத் மற்றும் மதுரா ஓ பாட்னிஸ் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விழுப்புரம் வங்கி கிளையில் ஒன்றாக பணியாற்றி வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியதாக கூறப்படுகிறது. இதற்கு கோபிநாத்தின் மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு, மதுரா ஓ பாட்னிஸ் ரெட்டியார்பாளையம் கிளைக்கும், கோபிநாத் மரக்காணத்தில் புதிய கிளைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை கோபிநாத் வழக்கம்போல் காரில் வங்கிக்கு சென்றுள்ளார். அவருடன் மதுரா ஓ பாட்னிசும் சென்றார். பணி முடிந்த பிறகு நேற்று மாலை மரக்காணத்தில் இருந்து திண்டிவனம் புறவழிச்சாலை வழியாக புதுச்சேரிக்கு காரில் வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கோபிநாத் ஆத்திரமடைந்துள்ளார்.
தைலாபுரம் அருகே புறவழிச்சாலையில் கோபிநாத் காரை நிறுத்தியுள்ளார். பின்னர், ஸ்குரு டிரைவரால் மதுரா ஓ பாட்னிஸ் கழுத்தில் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு, கார் கதவை மூடிவிட்டு திண்டிவனத்தில் இருந்து புதுவை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வானத்தின் மீது பாய்ந்துள்ளார். இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த கிளியனூர் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மேலும், விழுப்புரம் சரக டிஐஜி ஜியாவுல் ஹக், விழுப்புரம் எஸ்பி சசாங் சாய் உள்ளிட்டோரும் நேரில் வந்து விசாரணை நடத்தினர். விழுப்புரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய், கொலை செய்யப்பட்ட பெண்ணை மோப்பம் பிடித்துவிட்டு அங்கிருந்து கோபிநாத் தற்கொலை செய்த இடம் வரை ஓடி நின்றது. பின்னர் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து, மதுரா ஓ பாட்னிஸை கொலை செய்துவிட்டு கோபிநாத் தற்ெகாலை கொண்டாரா அல்லது மதுரா ஓ பாட்னிஸ் தன்னை தானே ஸ்குரு டிரைவர் மூலம் குத்தி தற்கொலை செய்து கொண்டதும், கோபிநாத் வாகனம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.