சென்னை: சென்னைக்குள் தடை செய்யப்பட்ட நேரங்களில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 120 தண்ணீர் லாரிகள் உள்பட 207 கனரக வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் வாக்கின்ஸ் சாலையில் கடந்த 18ம் தேதி காலை தாயுடன் ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்ற சிறுமி சவுமியா தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் அருண் சென்னை பெருநகர காவல் எல்லையில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை, அதேபோல் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை தண்ணீர் லாரி உள்பட எந்தவித கனரக வாகனங்களும் உள்ளே வர அனுதிக்க கூடாது. குறிப்பாக பள்ளி வேலை நேரங்களில் இந்த கட்டுப்பாடு முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும். மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்கள் உள்ளே வருவதை போக்குவரத்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவின்படி சென்னை பெருநகர காவல் எல்லையில் நேற்று முன்தினம் முதல் பள்ளி வேலை நேரங்களில் மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரங்களை கடந்து இயக்கப்பட்ட கனரக வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, நேற்று ஒரே நாளில் தடை செய்யப்பட்ட நேரங்களில் விதிகளை மீறி இயக்கப்பட்டதாக சென்னை முழுவதும் 120 தண்ணீர் லாரிகள் மற்றும் 87 கனரக வாகனங்கள் என மொத்தம் 207 கனரக வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நடவடிக்கை ெசன்னை முழுவதும் ெதாடர்ந்து நடந்து வருகிறது.