புல்பானி: ஒடிசாவில் கஞ்சா கடத்தலில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாருக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், காவல் நிலையத்தை சிலர் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் பிரிங்கியா காவல்நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து விசாரிப்பதற்காக காவல் நிலையத்திற்கு சென்றனர்.
அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்களின் வாக்குவாதம் கைகலப்பாகவும், வன்முறையாகவும் மாறியது. அங்கிருந்த சிலர் காவல் நிலையத்தின் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த தளவாடப் பொருட்களை தூக்கி வீசி எறிந்தனர். இன்னும் சிலர் காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர். அதனால் காவல் நிலையம் மளமளவென்று தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த மீட்புக் குழுவினர், தீ மேலும் பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தெற்கு ரேஞ்ச் ஐஜி சத்யபிரதா போய் கூறுகையில், ‘இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் போதை பொருளான கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து விசாரிக்க அவர்கள் காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கிருந்த சில போலீசார் அவர்களை விரட்டி உள்ளனர். இதனால் ஏற்பட்ட மோதலில் காவல் நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காவலர்கள் சிலர் காயமடைந்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு போலீசாரிடம் விசாரணை நடத்தப்படும். சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் நிலைய தீ வைப்பு சம்பவத்தில் சில கஞ்சா கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவருகிறது. தீ வைப்பு சம்பவத்தில் தொடர்புடைய சிலரை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.