சென்னை: ராயபுரம் மண்டலம், வார்டு 63க்கு உட்பட்ட தெற்கு கூவம் சாலையில் நேற்று முன்தினம் இரவு முதல் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், சாலையோரங்களில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகள், நீர்நிலைகளின் ஓரங்களில் உள்ள குப்பைக் கழிவுகள் மற்றும் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள பயன்பாடற்று கைவிடப்பட்ட வாகனங்கள் ஆகியவை அகற்றப்பட்டு வருகிறது. மேலும், அந்த இடங்களில் பிளீச்சிங் பவுடர் மற்றும் கொசு மருந்து தெளித்தல், கொசுப் புகைப் மருந்து அடித்தல் போன்ற சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணியினை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள பொதுமக்களிடம் கலந்துரையாடி, தங்கள் சுற்றுப்புறத்தை சுகாதாரமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ளவும், குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகளை தவறாமல் செலுத்திடவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், அங்குள்ள கழிப்பறைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திடவும், தேவைப்படும் இடங்களில் கூடுதல் கழிப்பிடங்களை கட்ட தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகரம் மிகப்பெரிய மாநகரமாகவும், உலகத்தரம் வாய்ந்த சிறப்புமிக்க இடங்களை கொண்டதாகவும் உள்ளது. ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இடங்களும் உள்ளன. இந்த பகுதியில் தூய்மைப்பணி மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், ‘நடவடிக்கையில் இறங்கி பணிகள் மேற்கொள்ளுதல்’ (கால் பார் ஆக்ஷன்) என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகள், நீர்நிலைகளின் ஓரங்களில் உள்ள கழிவுகளை அகற்றுதல், பொதுக்கழிப்பிடத்தை சுத்தம் செய்தல், சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளுதல், கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றுதல் போன்ற பணிகள் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது. டி.என்.இ.பி. லிங்க் சாலை, தெற்கு கூவம் சாலை போன்ற இடங்களில் கட்டிடக் கழிவுகள் மற்றும் குப்பை, நீர்நிலைகளின் ஓரங்களில் காணப்படும் குப்பை, கைவிடப்பட்ட வாகனங்கள் போன்ற 150 டன் குப்பைக் கழிவுகள் காணப்பட்டன.
இந்த பகுதியில் புதிய கழிப்பிடம் கட்டிதரப்படும். இங்குள்ள குப்பையை லாரிகள் மூலமாக 51 நடைகளில் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை பொதுமக்களும் இணைந்து ஒரு இயக்கமாக செயல்படுத்த வேண்டும். கூவத்தில் பலர் குப்பை கழிவுகளைபோடுகின்றனர். இதை தவிர்த்திட வேண்டும். அதிக குப்பை தேங்கியுள்ளதாக கண்டறியப்பட்ட இடங்களில் தீவிர தூய்மைப் பணி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாநகராட்சி பகுதிகளில் 15 நாட்களுக்கு மேலாக சாலை மற்றும் தெருவோரங்களில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள பயன்பாடற்ற கார்கள் அங்கிருந்து இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, குப்பைக் கொட்டும் வளாகங்களில் வைக்கப்படும்.
பயன்பாடற்ற கார்களில் மழைநீர் தேங்கும் போது டெங்கு கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் ஏற்படும் நிலை உள்ளது. ஆரம்ப நிலையிலேயே கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை அழித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பயன்பாடற்ற கார்களை உரிமையாளர்கள் உடனடியாக அகற்றிட வேண்டும். பொதுமக்களும் இந்த பணிகளில் இணைந்து செயல்பட்டு மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பை தர வேண்டும், என்றார். ஆய்வின்போது, கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத், கவுன்சிலர் சிவ ராஜசேகரன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.