சென்னை : சென்னையில் நேற்று எந்த விபத்தும் நடைபெறவில்லை என்று போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில், கடந்த 5ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலான 20 நாட்கள் பூஜ்யம் விபத்து இல்லாத நாள் என்ற விழுப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் பூஜ்ய விபத்து என்கிற பதாகைகள் வைக்கப்பட்டும் சிவப்பு நிற போக்குவரத்து சிக்னல்கள் இதய வடிவிலும் ஒளிர்ந்தன.
இந்த விழிப்புணர்வின் ஒரு பகுதியாக நேற்றைய தினம் போக்குவரத்து விதிகளை மதித்து, விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க உதவிட வேண்டும் என்று மக்களிடம் வலியுறுத்தப்பட்டது. மேலும் விபத்துகள் ஏதும் நடக்காமல் இருக்க போக்குவரத்து போலீசார், தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சென்னையில் நேற்று ஒருநாள் வெற்றிகரமாக எந்த ஒரு இடத்திலும் விபத்துகள் நடைபெறவில்லை எனவும் விபத்து குறித்த தகவல்கள், பதிவாகவில்லை என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.