திருவள்ளூர்: சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையான ஜெ.என்.சாலையில் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் விபத்துகளை குறைக்க ரூ.16 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக மீ்ட்டனர். திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் கலெக்டர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிகளவில் உள்ளன.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் திருவள்ளூருக்கு வந்து செல்கின்றன. இதேபோல் தனியார் தொழிற்சாலைக்குச் செல்லும் பேருந்துகளும் திருவள்ளூர் வழியாக ஏராளமாக வந்து செல்கின்றன. இந்நிலையில் திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்க நகரின் முக்கிய சாலையான ஜெ.என்.சாலையில் நடந்து செல்பவர்களுக்கு ஏதுவாக நடைபாதை அமைக்கப்பட்டது.
ஆனால் அந்த நடைபாதையில் அதிகளவில் பூக்கடைகள், காலணி கடைகள், துணிக் கடைகள் அமைத்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாதபடி ஆக்கிரமித்து வைத்துள்ளனர். மேலும் டீக் கடைகள், மெக்கானிக் கடைகள் போன்ற பல்வேறு வகையான கடைகளும் அங்கு முளைத்துள்ளன. இதனால் நடை பாதையில் நடந்து செல்ல வேண்டிய பொதுமக்கள் மாநில நெடுஞ்சாலையில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இதேபோல் அந்தந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களும் தாங்கள் கொண்டு வரும் வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்கள் அதிகளவில் வரும்போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது.
இதுகுறித்த தொடர் புகார் காரணமாக சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் மு.பிரதாப், வருவாய் அலுவலர் ஆ. ராஜ்குமார் ஆகியோரின் உத்தரவின் பேரில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சிற்றரசு அறிவுறுத்தலின் பேரில், உதவி கோட்டப் பொறியாளர் தஸ்நாவிஸ் பெர்ணான்டோ, வட்டாட்சியர் ரஜினிகாந்த், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜானகிராமன், உதவி பொறியாளர் தட்சிணாமூர்த்தி, நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர்கள் அரவிந்த், பிரசாந்த், மண்டல துணை வட்டாட்சியர் கலைச்செல்வி, வருவாய் ஆய்வாளர் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் சுப்பிரமணி, ஜான்சன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூ.16 கோடி என்று அதிகாரிகள் கூறினர். இதற்காக மாவட்ட போலீஸ் எஸ்பி ரா.சினிவாசபெருமாள் உத்தரவின் பேரில், டிஎஸ்பி தமிழரசி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வெற்றிச் செல்வன், அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை என பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இருந்தனர். இதனால் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையான ஜெ.என்.சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒரு வழிப்பாதையில் போக்குவரத்து இயக்கப்பட்டதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.