*பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நெல்லை : போக்குவரத்துத் தொழிலாளர்கள்- மாணவர்கள் மோதலை தடுக்க பஸ்களில் ஆபத்தான படிக்கட்டு பயணத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நெல்லை மாநகர பகுதியில் பாளையங்கோட்டையில் பள்ளி, கல்லூரிகள் நிறைந்து காணப்படுவதால் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படுகிறது. இதேபோல் நெல்லை சந்திப்பு, மேலப்பாளையம், பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன.
மாநகரம் மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளில் இருந்தும் பள்ளி, மாணவ- மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு பஸ்களில் பயணித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு இலவச பஸ்பாஸ் மூலம் செல்லும் மாணவர்கள் காலை மற்றும் மாலையில் அரசு பஸ்கள் நிரம்பி வழிகின்றன. இதில் பொதுமக்களும் பயணிப்பதால் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் மாணவர்கள் பெரும்பாலானவர்கள் படிக்கட்டு பயணத்தையே விரும்புகின்றனர்.
படிக்கட்டு பயணம் செய்வதால் விபத்தில் சிக்கி உயிர்பலியாகும் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க போக்குவரத்து போலீசார் ஆண்டு தோறும் மாணவர்கள், பொதுமக்களிடம் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க சாலை பாதுகாப்பு வாரவிழாவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தபோதும் இதை மாணவர்கள் கேட்பதில்லை எனக்கூறப்படுகிறது.
இதேபோல் அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்களுக்கும் படிக்கட்டில் மாணவர்கள், பொதுமக்களை பயணிக்க அனுமதிக்கக்கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதைமீறி படிக்கட்டில் மாணவர்கள் பயணிக்கும் போது போக்குவரத்து கழக பரிசோதனை ்அதிகாரிகள் பார்வையில் பட்டுவிட்டால் டிரைவர், கண்டக்டர்களை கண்டிப்பதும் தண்டனையும் வழங்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டுதான் டிரைவர்கள், கண்டக்டர்கள் படிக்கட்டில் நின்று பயணிப்பவர்களை பஸ்சின் உள்ளே செல்ல அறிவுறுத்துவார்கள்.
இதனால் மாணவர்களுக்கும் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும் இடையே முட்டல் மோதல் ஏற்படுகிறது. ஒருசில இடங்களில் மாணவர்கள், போக்குவரத்து தொழிலாளர்களை தாக்கிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. மேலும் தொழிலாளர்கள் பஸ்களை நிறுத்திவிட்டு ஸ்டிரைக்கில் ஈடுபடவும் வாய்ப்பாக அமைகிறது. இந்நிகழ்வுகளால் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே, இனியாவது பஸ் படிக் கட்டுகளில் பயணிக்கும் போக்கை மாணவர்கள் கைவிட வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் தக்க அறிவுரைகளை கனிவுடன் கூறி மாணவர்களை பக்குவப்படுத்த வேண்டும்.அதே வேளையில் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகள் அதிக அளவில் பயணிக்கும் பாளையங்கோட்டை, ைஹகிரவுண்ட், பேட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர், தாழையூத்து, மானூர், சேரன்மகாதேவி உள்ளிட்ட வழித்தடங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் செயல்படும் நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். இதுவே அனைத்துத்தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.