*மாற்றுப்பாதையில் பஸ்கள், வாகனங்கள் இயக்கம்
களக்காடு : களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி பெரியகுளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த குளத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வரும் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு போதிய மழை இல்லாததால் திருக்குறுங்குடி பெரியகுளம் நிரம்பவில்லை. இந்நிலையில் குளத்தில் உள்ள மடைகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருக்குறுங்குடி பெரியகுளத்தில் ரூ.49 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. தற்போது சேரன்மகாதேவி-பணகுடி பிரதான சாலையில் உள்ள பெரியகுளத்தின் நடுமடையில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
சேரன்மகாதேவி-வள்ளியூருக்கு திருக்குறுங்குடி, களக்காடு வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மாவடி, மாவடி புதூர், செட்டிமேடு, டோனாவூர், புலியூர்குறிச்சி, ஏர்வாடி வழியாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.
மேலும் பைக், ஆட்டோக்களில் செல்பவர்கள் மலையடிப்புதூர் பாலத்திலிருந்து கட்டளை, ஆவாரந்தலை, நம்பிதலைவன் பட்டயம் வழியாக திருக்குறுங்குடிக்கு சுற்றி சென்று வருகின்றனர். ஆனால் இந்த சாலை குறுகியதாக இருப்பதாலும், பல்வேறு இடங்களில் ஆபத்தான வளைவுகள் காணப்படுவதாலும், வாகன ஓட்டிகள் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுபோல திருக்குறுங்குடி வழித்தடத்தில் பஸ்கள் இயங்காததால், மலையடிபுதூர், திருக்குறுங்குடி, நம்பிதலைவன் பட்டயம் கிராம மக்களும் பாதிப்படைந்துள்ளனர். எனவே மடை சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி திருக்குறுங்குடி வழியாக மீண்டும் போக்குவரத்து தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.