*பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கடலூர் : கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கடலூர் மாநகராட்சியில் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலை பிரதான சாலையாக விளங்கி வருகிறது. இங்கு அரசு மருத்துவமனை, கல்லூரி, பள்ளிக்கூடங்கள், அரசு தொழில் பயிற்சி நிலையம், வணிக வளாகங்கள் ஆகியவை உள்ளதால் மிகவும் முக்கிய சாலையாக விளங்கி வருகிறது.
ஆரம்பத்தில் இது 80 அடி அகலம் கொண்ட மிகவும் அகலமான சாலையாக விளங்கியதால் போக்குவரத்து எளிதாக நடந்து வந்தது. மேலும் இந்த சாலையை சுற்றி அமைந்துள்ள கண்ணையா நகர், சாந்தி நகர், ரட்சகர் நகர் விரிவு, அண்ணாமலை நகர், காமாட்சி நகர், சிவசக்தி நகர், சுப்புலட்சுமி நகர், ரெயின்போ நகர் என 20க்கும் மேற்பட்ட நகர்களில் வசிக்கக்கூடிய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அவர்களது இல்லத்திற்கு செல்ல ஒரே பிரதான சாலையாக இந்த சாலை உள்ளது.
தற்போது இந்த சாலையின் இரு புறமும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்திற்கு பெரும் சிரமமாக உள்ளது. இதையடுத்து பொதுமக்களின் தொடர் கோரிக்கைகளை அடுத்து கடந்த 2018ம் ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு முறைப்படி நோட்டீஸ் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் நகரின் மக்கள் தொகையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், புதுச்சேரி, சோரியாங்குப்பம், சாவடி உள்ளிட்ட பகுதி மக்கள் கம்பியம்பேட்டை இணைப்புச் சாலையை பயன்படுத்த வேண்டி உள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக நேரங்களில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் அந்த பகுதியில் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கனரக வாகனங்கள், பேருந்துகள், கட்டுமான பொருட்கள் ஏற்றி செல்லும் லாரிகள் இவை அனைத்தும் செம்மண்டலம் ஜங்ஷனில் உள்ள குறுகிய சாலை வழியே கம்பியம்பேட்டை இணைப்பு சாலையில் செல்ல வேண்டி உள்ளதால், விபத்துகள் ஏற்படுவது மட்டுமல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அத்தியாவசிய பணிக்கு செல்பவர்கள் முதல் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.மேலும் அவர்களுக்கு நேர விரயமும் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.