நன்றி குங்குமம் தோழி
லட்டு… காரம்… சேவரீஸ்… என்ன படித்ததுமே நாக்கில் எச்சில் ஊருதா? பண்டிகை காலம் நெருங்கியாச்சு. ஒருவருக்கு ஒருவர் இனிப்பை கொடுத்து சந்தோஷங்களை பகிர்வது வழக்கமான நிகழ்வுதானே.நமது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பண்டிகை நேரத்தில் கிஃப்ட்டாக நாம் கொடுக்கும் ஸ்வீட்ஸ் சந்தோஷத்தைக் கொடுக்கும்..! ஆனால், ஆரோக்கியத்தைக் கொடுக்குமா? மில்லியன் டாலர் கேள்விகளோடு நம்மிடம் பேச ஆரம்பித்தவர்கள் “மரபு சுவை” என்கிற பெயரில் திருவான்மியூரில் பாரம்பரிய இனிப்பு, காரம், சேவரீஸ் வகைகளை தரமோடு தயாரித்து வழங்கும் ‘கம்மர்கட்’ சீனிவாசன் மற்றும் அவரின் மனைவி ரோகிணி இணையர்.
‘‘கண்ணுக்கு கலர்ஃபுல்லா தெரியும் இனிப்பு மாதிரியே எங்கள் தயாரிப்பில் ஸ்வீட்ஸ் இல்லைதான். ஆனால் ஆரோக்கியமான தின்பண்டங்களை உண்ணக் கொடுக்கிறோம் என்கிற மன நிறைவை எங்கள் தயாரிப்பு கண்டிப்பாக எங்களுக்குத் தருகிறது. வெள்ளை சர்க்கரையில் தயாராகும் இனிப்பை சுவைத்தவர்கள் சட்டென எங்கள் தயாரிப்பு சுவையை உணர முடியாதுதான். காரணம், வெள்ளைச் சர்க்கரையின் சுவை சட்டென நாவில் ஏறும். ஆனால் எங்கள் தயாரிப்பு முழுவதும், பனை அல்லது கரும்பு வெல்லத்தில் தயாராகும்.
இந்த இனிப்புகள் மெதுவாகவே நாவில் சுவையினை ஏற்றும்.மேலும் வெள்ளை அரிசியை ருசித்தவர்களால், பாரம்பரிய அரிசிக்கு மாறுவதென்பது சாதாரண விஷயம் கிடையாது. பாரம்பரிய அரிசிகளை நேரடியாக சமைத்து உண்பதற்கு ஊற வைக்க மூன்று நாள், வேகவைக்க 3 மணி நேரம் எடுக்கும். அத்துடன் இப்போதிருக்கும் வாழ்வியல் சூழலில், உணவு செரிமானத்திற்கான உடல் இயக்கம் அனைத்து தரப்பினருக்கும் வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதனால்தான் எங்கள் பாரம்பரியத் தயாரிப்புகளை ட்ரென்டியாய் வேறு வடிவங்களில் மாற்றி கொடுக்க முடிவு செய்தோம்.
துவக்கத்தில் கிடைக்கின்ற பாரம்பரிய அரிசிகளை எல்லாம் பயன்படுத்தி லட்டு தயாரிக்கத் தொடங்கினோம். எங்களின் இந்த முயற்சி வெற்றி பெறத் தொடங்கியது. இப்போது எங்களிடத்தில் கருப்புக் கவுனி லட்டு, மாப்பிள்ளை சம்பா லட்டு, கருங்குருவை லட்டு, இழுபப்பூ சம்பா லட்டு, காட்டுயானம் அரிசி லட்டு, ராஜ்மா அரிசி லட்டு என விதவிதமான லட்டுகள் இருக்கிறது. இத்துடன் 9 விதமான பாரம்பரிய அரிசிகளை ஒன்றாய் இணைத்து கிங் ஆஃப் லட்டு என்கிற பெயரில், அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கிய லட்டும் கிடைக்கிறது.
இதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. லட்டு தயாரிப்பின் வெற்றியை தொடர்ந்து காரச் சுவை கேட்பவர்களுக்காக சேவரிஸ் தயாரிப்புகளையும் கொண்டு வந்தோம். தூயமல்லி முறுக்கு, மாப்பிள்ளை சம்பா முறுக்கு, வேர்க்கடலை மற்றும் முந்திரி இணைத்த மிக்ஸர், பக்கோடா, காராச்சேவு போன்ற தயாரிப்புகளிலும் இறங்கினோம். சிவப்பு அரிசியால் தயாரான அதிரசமும் பாரம்பரிய சுவையோடு இருக்கிறது.
தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் அனைத்தும் ஆர்கானிக் என்பதால், பனை அல்லது கரும்பு வெல்லத்தை மட்டுமே பயன்படுத்துவதுடன், செக்கில் ஆட்டி எடுத்த நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்களை பயன்படுத்தியே தின்பண்டங்களை தயாரிக்கிறோம். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயினை மீண்டும் பயன்படுத்துவது கிடையாது. அதேபோல், விலங்குகளிடம் இருந்து எடுக்கப்படுகிற பால், வெண்ணெய், தயிர், தேன், முட்டை என அசைவப் பொருட்களை சேர்க்காமல் வீகனாகத் தயாரிக்கிறோம்.
உணவுப் பண்டங்கள் நீண்டநாள் கெடாமல் இருப்பதற்காக பதப்படுத்துதல் (preservative), மணம் கூட்டுதல், நிறம் கூட்டுதல், கலப்படம் என எதுவும் எங்கள் தயாரிப்பில் சுத்தமாக இருக்காது. வறுப்பது, அரைப்பது, தயாரிப்பு என எல்லாமும் கைகளால் செய்கிற மேனுவல் பிராசஸ் முறைதான். தானியங்களை வறுக்க மண் பாத்திரங்களையே பயன்படுத்துகிறோம். ஆர்டர் எடுத்த பிறகே தயாரிப்பு என்பதால், ஸ்டாக் என்பதே எங்களிடம் இருக்காது. தயாரிப்பின் தேதியை உணவுப் பொருட்களில் குறிப்பிட்டு, எத்தனை நாளைக்குள் பயன்படுத்திட வேண்டும் என்பதையும் வாடிக்கையாளர்களிடம் தெரிவிப்போம்.
எங்களுடைய பாராம்பரிய தயாரிப்புகளை கார்ப்பரேட் ஸ்டைலில் கிஃப்டிங் செய்ய முடியுமா என்கிற தயக்கம் ஆரம்பத்தில் இருந்தது. அந்த தயக்கத்தை உடைத்தவர்கள் எமது வாடிக்கையாளர்களே. எங்கள் தயாரிப்பின் தரமும், சுவையும் வாடிக்கையாளர் மனதில் எப்போதும் நீடித்து நிற்பதால், இந்த ஆயுத பூஜை, தீபாவளிக்கு கிஃப்ட் பேக் செய்வதை அவர்களே ஆரம்பித்தார்கள்.
குறைந்தது 50 ரூபாயில் தொடங்கி அதிகபட்சம் 4000 ரூபாய் வரை விதவிதமான அளவில் கிஃப்ட் பாக்ஸ் எங்களிடம் இருக்கிறது. இதில் பிரிமியம் பாக்ஸ்களையும் அறிமுகப்படுத்தி, கார்ப்பரேட்களுக்கு பேக் செய்து கொடுக்கிறோம். பாரம்பரிய அரிசிகளில் தயாரான தனித் தன்மையுள்ள 6 விதமான லட்டு, 9 மற்றும் 12 விதமான லட்டுகள், 24 லட்டுகள் அடங்கிய கிஃப்ட் பாக்ஸ்கள் தனித்தனியாக இருக்கிறது.
இது தவிர்த்து சிவப்பு அரிசி அதிரசம், தூயமல்லி அரிசி முறுக்கு, மாப்பிள்ளை சம்பா அவல் மிக்ஸர் இணைந்த அரை கிலோ கிஃப்ட் பாக்ஸ், காஜு கத்திலி எனர்ஜி பார் மற்றும் கம்பு மைசூர் பாகு காம்போவில் ஸ்வீட் பாக்ஸ்கள் உள்ளது. மேலும் ஸ்வீட், காரம், சேவரீஸ் இணைந்த காம்போ, அரை கிலோ, ஒரு கிலோ, ஒன்றேகால் கிலோ பாக்ஸ் மற்றும் மொத்த மரபுசுவை காம்போ கிஃப்ட் பாக்ஸ்களும் தனித்தனியாக உள்ளன.
பண்டிகைகள் மட்டுமல்லாது அறுபதாம் கல்யாணம், சதாபிஷேகம், பிறந்தநாள், திருமணநாள் இவற்றுக்கெல்லாம் கிஃப்ட் பாக்ஸ் செய்து தரச் சொல்லி ஆர்டர்கள் வருகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கான டயாபடிக் காம்போ பாக்ஸ்களும் இருக்கிறது. எமக்கு மார்க்கெட்டிங் செய்பவர்கள் கஸ்டமர்கள்தான். உள் உணர்வுடன் சுவைப்பவர்களுக்கே எங்கள் தயாரிப்பின் தனித்தன்மை தெரியும். நியூட்ரீஷியன் லாஸ் இல்லாத எங்கள் தயாரிப்பின் சுவையை எமது வாடிக்கையாளர்களால் மட்டுமே உணர முடிகிறது. குறிப்பிட்ட பிரிவு மக்கள் எங்கள் தயாரிப்புக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அவர்கள் எல்லாமே இயற்கை விரும்பிகள். உடல் நலன் கருதி மெடிஷனல் உணவைத் தேடுபவர்கள்.
வேர்ல்ட் ஆஃப் மவுத் மூலம் எங்கள் தரம் பேசுகிறது. இதனால்தான் யு.எஸ், சிட்னி போன்ற வெளிநாடுகளில் இருந்தெல்லாம் ஆர்டர்கள் தொடர்கிறது. பிற நிறுவனங்கள் தயாரிப்பின் எண்ணிக்கையை எவ்வளவு வேண்டுமானாலும் காட்டலாம். ஆனால் சில அடிப்படை கொள்கைகளோடு எங்களால் தரத்தில் கண்டிப்பாக காம்பெடிஷன் செய்ய முடியும்ஒரு தொழிலை நேர்மையாகச் செய்தால் அதனுடைய அவுட்புட் எப்படியிருக்கும் என்பதன் தேடலே இந்த பாரம்பரிய மரபுசுவை தின்பண்டத் தயாரிப்பு.
நாங்கள் எங்கள் தொழிலில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கிறோம் என்பதை நெஞ்சை நிமிர்த்தி எங்களால் உறுதியாகச் சொல்லமுடியும்.நீங்கள் பிறருக்கு வழங்கும் பண்டிகைகால ஸ்வீட் கிஃப்ட் விலைமதிக்க முடியாததாக எப்போதும் இருக்க வேண்டும்…’’ வாழ்த் துகளை பகிர்ந்து விடைகொடுத்தனர் இந்த ட்ரெடிஷனல் தம்பதிகள்.
8 வகையான கம்மர்கட்டில் கலக்குகிறோம்…
‘‘நமது பாட்டி காலத்துடன் பாரம்பரிய உணவுகள் காணாமலே போயிருந்தது. சென்னை மக்கள் சத்தான உணவுகளை பாரம்பரியம் மாறாமல் சாப்பிட வேண்டும் என்கிற தேடலில் இருந்தபோது, ஆர்கானிக் உணவுகள் லேசாக எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தது.என் குழந்தைக்கான பாரம்பரிய உணவை தேடியபோது எனக்கு எதுவுமே கிடைக்கவில்லை. கார்ப்பரேட் ஃபீல்டில் வேலை செய்து கொண்டிருந்த நான், 2014ல் என் மனைவியுடன் இணைந்து மரபு சுவை என்கிற பெயரில் பாரம்பரிய தின்பண்டங்களை குழந்தைகளுக்காக தயாரிக்கத் தொடங்கினேன்.
என் சிறுவயதில் நான் பார்த்து ரசித்து உண்ட சுவை மிகுந்த சாக்லெட் என்றால் அது கம்மர்கட் மட்டுமே. அந்த சுவை என் நாவில் இன்னும் இருக்கிறது. அதனால்தான் நானும் எனது
மனைவியுமாக கம்மர்கட் தயாரிப்பை தேர்வு செய்து அதில் இறங்கினோம். தேங்காய், பனை வெல்லம் கலந்து கம்மர்கட்டிற்கான ஒரிஜினாலிட்டியை அப்படியே கொடுத்ததுமே பயங்கரமாக ஹிட் அடித்தது. ஆனால் கடிப்பதற்கு கடினமாக, வாயில் போட்டால் அரைமணி நேரம் அப்படியே கரையாமல் இருப்பதாக வாடிக்கையாளர்கள் குறிப்பிட்டதால், வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு, மீடியம் சாஃப்ட் கம்மர்கட், பேபி சாஃப்ட் கம்மர்கட், குச்சி சொருகிய லாலிபாப் கம்மர்கட் என 8 விதமாய் கம்மர்கட்டை வித்தியாசப்படுத்தி தயார் செய்து வருகிறோம்.இப்போது கம்மர்கட்டில் பாதாம், முந்திரி, வேர்க்கடலை இணைத்து நட்ஸ் கம்மர்கட் என்ற ஒன்றையும் தயாரிக்கிறோம்.’’
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்