வரிசைகட்டும் பண்டிகைகள்
அறிய வேண்டிய புள்ளிவிவரங்கள்!
ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டாலே வரிசைகட்டும் பண்டிகைகள். பொங்கல் வரை ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் பிரியமான உணவுகளை உண்பவர்கள் ஒரு பக்கம். எந்தப் பண்டிகை என்றாலும் கடும் ஆர்மி ஆபீசர் போல சாப்பாடு விஷயத்தில் இருப்பவர்கள் இன்னொரு பக்கம் என நம்மைச்சுற்றி ஆரோக்கியம் சார்ந்த பேச்சுகள் களைக்கட்டும். கூடவே, இயன்முறை மருத்துவம் சார்ந்த புள்ளிவிவரக் குறிப்புகளையும் தெரிந்துகொள்வோம், வாருங்கள்…
1. நம்ம ஊர் பெண்கள் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் நான்கில் மூன்று பேருக்கு அதாவது, 85 – 90 சதவிகிதம் பேருக்கு பி.எம்.எஸ்ஸின் (Pre Menstrual Syndrome) அறிகுறிகள் இருக்கிறது. அதாவது, மாதவிடாய் வரும் சில நாட்களுக்கு முன்னர் அடக்கமுடியாமல் கோபப்படுவது, அழுவது, அதிக இனிப்புப் பொருட்களை சாப்பிடுவது எனப் பட்டியல் நீளும்.
2. இந்தியர்களில் வருடா வருடம் சுமார் 11 சதவிகிதம் பேர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இது கூடிய விரைவில் மேலும் அதிகரிக்கும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
3. ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவருக்கு உண்டாகும் ஆஸ்டியோபொரோடிக் எலும்பு முறிவுகள் (Osteoporotic Fracture) ஆண்களுக்கு ஐந்தில் ஒருவருக்கு நிகழ்கிறது. அதாவது, எலும்பின் அடர்த்திக் குறைவதால், எலும்புகள் வெற்றுக் குழாய் போல ஆகும். இதனால் எளிதில் முறிவுகள் நிகழும்.
4. இந்தியர்களில் நாற்பத்தி ஏழு சதவிகிதம் முதியவர்கள் முழங்கால் வலியினால் அதாவது, முட்டி வலியினால் அவதியுறுகிறார்கள். இதில் சரிபாதி சதவிகிதத்தினர் இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்கள்.
5. சர்வதேச சுகாதார நிலையத்தின் ஆய்வுகளின்படி விழிப்புணர்வின்மை காரணமாக 12% நபர்கள் மட்டுமே ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.
6. தோள்பட்டை இறுகிப் போதல் (Frozen Shoulder) பிரச்னை பரவலான ஒன்றாக மாறி வருகிறது. இந்தியர்களில் சுமார் இரண்டு முதல் ஐந்து சதவிகிதம் பேர் இத்தகைய தோள்பட்டை வலியினால் வருடா வருடம் அவதியுறுகிறார்கள்.
7. குழந்தைப் பருவத்தில் நாற்பது சதவிகிதம் தான் மூளை வளர்ச்சியடைந்திருக்கும். மீதமுள்ள அறுபது சதவிகித மூளை வளர்ச்சி அதன் பிறகுதான் குழந்தையோடு சேர்ந்து வளரும். இதற்கு பதினெட்டு வயது வரை ஆகும். ஆனால், இன்று ஒன்பது முதல் பதினெட்டு வயது வரையிலான பருவத்தில் உள்ளவர்களே அதிகம் டிவி, செல்போன் பயன்படுத்துகிறார்கள். இதனால் இளைய வயதில் சர்க்கரை நோய், உடற்பருமன் வரும் வாய்ப்புகள் அதிகம்.
8. இந்தியாவில் வருடா வருடம் இருபத்தி நான்கு சதவிகித இதயம் சார்ந்த உயிரிழப்புகள் ரத்த அழுத்தத்தினால் உருவாகிறது.
9. தெற்காசியாவைச் சேர்ந்த நமக்கு பக்கவாதம் வரும் ஆபத்து அதிகம். மேலும் அறுபது வயதைக் கடந்த ஆண்களுக்கு அதிக அளவில் ஆபத்து உள்ளது என ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.
10. மல்லாந்த நிலையில் தூங்குவது சிறப்பான தூக்க நிலை. சுமார் 10 சதவிகித மக்கள் இப்படி மல்லாந்த நிலையிலேயே தூங்குகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. இவ்வாறு உறங்கும்போது முதுகெலும்பும் அதன் இயற்கையான வளைவுடன் அமைதிப்பெறுகிறது. இதனால் முதுகு, கழுத்து வலியினை குறைக்க முடியும்.
11. இந்தியர்களுக்கு ஐம்பத்தி ஏழு சதவிகித பக்கவாதத்திற்கு உயர் ரத்த அழுத்தமே காரணமாக அமைகிறது.
12. நம் நாட்டில் மட்டும் இருபத்தி ஏழு சதவிகித வளரிளம் பருவத்தினர் எடை குறைவாகவும், இருபது சதவிகிதத்தினர் உடல் பருமனோடும் இருக்கின்றனர்.
13. இந்தியர்களில் நான்கில் ஒருவருக்கு ரத்த அழுத்தம் இருக்கிறது என சமீபத்திய ஆய்வுகள் சொல்கிறது. கிட்டத்தட்ட வீட்டில் ஒருவருக்கு வரும் அபாயம் உள்ளது.
14. தினசரி தொடர்ந்து நூறு ஸ்கிப்பிங் செய்தால் குறைந்தபட்சம் பதினைந்து முதல் இருபது கலோரிகள் வரை எரிக்க முடியும். இதனால் முக்கியத் தசைகள் வலுவடையும். மேலும் வயிற்றுப் பகுதியை சுற்றியுள்ள கொழுப்பும் குறையும்.
15. சுமார் நாற்பத்தி ஆறு சதவிகிதம் பேர் தங்களுக்கு ரத்த அழுத்தம் உண்டு என்பதனையே அறியாமல் உள்ளனர்.
மொத்தத்தில் ஆரோக்கியத்திற்கு ஆரம்பம் முதலே நேரம் செலவழித்தால் மருத்துவமனையில் பணம் செலவழிக்காமல் இருக்கலாம். மேலும், நம் உடம்பின் பாதி ஆரோக்கியம் உடற்பயிற்சியில் உள்ளதால், முறையாகப் பயிற்சிகள் செய்ய இயன்முறை மருத்துவரை அணுகி பலன் பெறுவது நன்று.
கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்