மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் சாகச சுற்றுலாவை சுற்றுலாத்துறை அறிமுகப்படுத்த உள்ளது.மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அடுத்த கீழக்கரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டும் பணி, கடந்தாண்டு மார்ச் மாதம் துவங்கியது. மொத்தம், 65 ஏக்கரில் ரூ.44 கோடியில் கட்டப்பட்ட இந்த அரங்கத்தை இந்த ஆண்டு ஜன.24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அரங்கம் திறக்கப்பட்டபோது நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளை காண்பதற்கு, உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்து, 50 ஆயிரம் பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
அதன்பின், அரங்கத்தில் உள்ள கால்நடைகள் குறித்த அருங்காட்சியகம் மற்றும் நூலகங்கள், மினி தியேட்டர் ஆகியவற்றை பார்வையிட வார நாட்களில் 100 பேரும், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் 500 பேர் வீதம் மாதத்திற்கு, சுமார் 7 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர்.பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த இந்த அரங்கம், கடந்த 9ம் தேதி முதல் சுற்றுலாத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரங்கத்தில் மாவட்டத்தின் சுற்றுலா வருவாயை பெருக்கும்விதமாக சாகச சுற்றுலாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இளம் தலைமுறையினரை கவரும் விதமாக மலையேற்றம், காத்தாடி விழா, ஏர் பலூன், ஜிப்லைன், சைக்களிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளன. மேலும், தமிழர்களின் பாரம்பரிய கலைகளை பறைசாற்றும்விதமாக, பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன. இதற்கான, அரசாணை விரைவில் வெளியாக உள்ளது. அரசாணை வெளியான பின், கலை நிகழ்ச்சிகளும், சாகச சுற்றுலா திட்டமும் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும். இதனால், பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், சுற்றுலா வருவாயும் உயரும் என, மாவட்ட சுற்றுலாத்துறையினர் தெரிவித்துள்ளனர்.