அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடைகளை காலி செய்வது தொடர்பாக வியாபாரிகள் இடையே ஏற்பட்ட தகராறில் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்துபோலீசார் இரண்டு தரப்பினர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக வியாபாரியை கைது செய்வதற்கு இன்று காலை போலீசார் சென்றபோது அங்கு வியாபாரி இல்லாததால் அவரது மனைவியை விசாரணைக்காக கோயம்பேடு காவல்நிலையம் அழைத்துவந்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த வியாபாரிகள் உடனடியாக கோயம்பேடு மார்க்கெட் அனைத்து கூட்டமைப்பு சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கூட்டமைப்பு சங்கம் சார்பில், கோயம்பேடு உதவி ஆணையர் சரவணனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வியாபாரியின் மனைவியை விடுவிக்கவேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு உதவி ஆணையர், ‘’விசாரனை முடிந்தபிறகு அனுப்புகிறேன்’ என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் கோயம்பேடு மார்க்கெட் ஒருங்கிணைந்த அனைத்து கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர் தலைமையில் 700க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கோயம்பேடு காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீசார் ‘’இந்த வழக்கு தொடர்பாக உதவி ஆணையர் விசாரணை செய்வதால் அவரை தான்கேட்க வேண்டும்’’ என்று கூறியதால் வியாபாரிகள் உதவி ஆணையர் நேரில் வரவேண்டும் என்று தெரிவித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
அந்த சமயத்தில், அந்த வழியாக வந்த பெருநகர காவல் ஆணையர் அருணின் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டு ஊர்ந்து சென்றது. இதையடுத்து அங்கு சென்ற அருண், உதவி ஆணையாளர் சரவணனை அழைத்து விசாரித்துவிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதன்பிறகு கோயம்பேடு துணை ஆணையர் அதிவீரபாண்டியன் விரைந்துவந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வியாபாரிகள், ‘’உதவி ஆணையரின் விசாரணை சரியில்லை. வியாபாரியின் மனைவியை விசாரணைக்கு எப்படி அழைத்துவரலாம்’’ என்று கேட்டனர். இதன்பிறகு வியாபாரி மனைவியை உடனடியாக விடுவிப்பதாக கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதனிடையே தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏஎம்.விக்கிரமராஜா வந்து போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பிறகு விக்கிரமராஜா கூறும்போது,’’வியாபாரி மனைவியை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்த போலீசாரை கண்டிக்கிறோம். கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகளின் இடையே நடக்கும் பிரச்னை குறித்து நியாயமான வழக்கு பதிவு செய்ய வேண்டும். சாதி தொடர்பான பொய்யான வழக்குகளை பதிவு செய்யக்கூடாது. பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டால் வியாபாரிகள் அனைவரும் கடைகளை அடைத்து மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்’
என்றார்.