திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே வியாபாரியிடம் செல்போன் பறிக்க முயன்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேளம்பாக்கம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (40). இவர், அப்பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை சுமார் 4 மணி அளவில் கேளம்பாக்கத்தை அடுத்துள்ள புதுப்பாக்கம் பகுதியில் எம்ஆர் ராதா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் அவரது கையில் இருந்த செல்போனை பறிக்க முயற்சித்தனர். அவர் கூச்சல் போட்டு இருவரையும் பிடித்துக்கொண்டார். மூவரும் கட்டி போட்டு சண்டை போடுவதை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.
இதையடுத்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கேளம்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில் பொது மக்களிடம் சிக்கிய இருவரும் பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த சந்தோஷ் (22), உதயா (19) என்பது தெரியவந்தது. இருவரும் தனியாக நடந்து செல்லும் நபர்களிடமிருந்து செல்போன்களை பறிக்கும் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.