நியூயார்க்: ‘அணு ஆயுதத்திற்கு சாத்தியமான இந்தியா, பாகிஸ்தான் போரை வர்த்தகம் மூலம் நிறுத்தியதற்காக பெருமைப்படுகிறேன்’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறி உள்ளார். இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தாவிட்டால், இரு நாடுகளுடனான வர்த்தகத்தை நிறுத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் மிரட்டி பணிய வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என இந்தியா கூறி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் ஆன்ட்ரூஸ் கூட்டு ராணுவ தளத்தில் இருந்து வாஷிங்டன் புறப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அணு ஆயுத சாத்தியமான போரை வர்த்தகம் மூலம் நாங்கள் நிறுத்தினோம். இரு தரப்பும் துப்பாக்கி குண்டுகள் மூலம் பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தனர். நாங்கள் தோட்டக்களுக்கு பதிலாக வர்த்தகத்தை பயன்படுத்தனோம்.
இந்த போரை நிறுத்தியதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இப்போது பாருங்கள் இந்தியாவும் பாகிஸ்தானும் நன்றாக இருக்கிறார்கள். இந்தியா எங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேசி வருகிறது. பாகிஸ்தான் குழுவினர் அடுத்த வாரம் வருகின்றனர். இதைப் பற்றி எல்லாம் யாரும் பேசுவதில்லை’’ என்றார்.
* பிரதமர் மோடி பேசுவது எப்போது? காங்.கேள்வி
இரு நாட்டுக்கும் இடையே சமரசம் செய்ததாக அதிபர் டிரம்ப் 11 முறை கூறிய பின்னரும் பிரதமர் மோடி மவுனம் கலைப்பது எப்போது என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் அதிபர் டிரம்பின் பீடியோ கிளிப்பை டேக் செய்து பதிவிட்டுள்ளதாவது, ‘‘21 நாட்களில் மோடியின் சிறந்த நண்பர் இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தில் தனக்கு பங்கு இருப்பதாக கூறுவது இது 11வது முறையாகும்.
ஆனால் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி எப்போது பேசுவார்? 3 நாடுகள், 3 நகரங்களில் 20 நாட்களில் 9 முறை அதிபர் டிரம்ப் இது தொடர்பாக பேசியுள்ளார். திரு மோடி எப்போதும் செய்வதையே அதிபர் டிரம்பும் செய்கிறாரா. அவ்வளவு சிறப்பாக செய்கிறாரா? அல்லது அவர் உண்மையை பேசுகிறாரா? டிரம்பின் கூற்றுக்களை தெளிவுபடுத்தவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.