புதுடெல்லி: நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், கைவினைப் பொருட்கள் மற்றும் சணல் சார்ந்த தொழில்துறைகளின் ஏற்றுமதி மதிப்பை உயர்த்தவும் ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மக்களவையில், ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும் மத்திய சென்னை எம்.பியுமான தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகள்:
* சரக்கு ஏற்றுமதியின் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் அதற்கெனத் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
* ஜூன் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 9.4 சதவீதமாக அதிகரித்திருப்பது உண்மையா என்பதையும், மேலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையே அதிகரித்து வரும் இடைவெளியை நிவர்த்தி செய்வதற்காகப் பரிசீலிக்கப்படுகின்ற உத்திகள் என்ன?
* ஏற்றுமதியை அதிகரிக்க ஒன்றிய அரசு கவனம் செலுத்தும் ஆறு முக்கியத் துறைகள் மற்றும் இருபது நாடுகளின் விவரங்களைத் தெரியப்படுத்தவும் .
* கைவினைப் பொருட்கள் மற்றும் சணல் போன்ற தொழிலாளர் சார்ந்த துறைகளின் ஏற்றுமதி மதிப்புகள் சரிவைக் கண்டுள்ளன என்பது உண்மையா என்றும் மேலும் இந்தத் துறைகளை ஆதரிப்பதற்கும் இவற்றை சரிவில் இருந்து மீட்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள் என்ன?
* மின்னணுப் பொருட்களின் இறக்குமதி 16 சதவீதமாகவும், வெள்ளியின் இறக்குமதி 377.4 சதவீதமாகவும் உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக சமநிலையில் இதனால் ஏற்படும் தாக்கங்களை சரிசெய்ய ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?
* வீழ்ச்சியடைந்து வரும் துறைகளில் உள்ள ஏற்றுமதியாளர்களை உலக அளவில் போட்டியிடும் வகையில் தயார்படுத்துவதற்காக வழங்கப்பட்ட பயிற்சிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட திறன் மேம்பாட்டு முயற்சிகள் என்ன என கேள்வி எழுப்பினார்.