கீழ்வேளூர்: நாகப்பட்டினம் மாவட்டம், மேலப்பிடாகையில் ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, மரபணு மாற்று விதைகளை தடை செய்ய வேண்டும், டெல்லியில் போராடிய விவசாயி மீது போடப்பட்ட வழக்கை திரும்பபெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் ஐக்கிய விவசாய சங்கம் சார்பாக டிராக்டர் பேரணி நடைபெறுவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்தனர்.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் மேலப்பிடாகையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் நேற்று டிராக்டர் பேரணி தொடங்க திட்டமிட்டு இருந்தனர். அதற்காக டிராக்டர் பேரணி தொடங்க ஏராளமான விவசாயிகள் டிராக்டருடன் வந்த நிலையில் அங்கு வந்த காவல் துறையினர் அனுமதி மறுத்து பேரணிக்கு தடை விதித்தனர். இதையடுத்து விவசாயிகள் விவசாய விளை நிலத்தில் நின்று ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கமல்ராம், மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேசன், மாவட்ட கவுரவ தலைவர் கருணைநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.