பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே டிராக்டர் மோதி கல்லூரி மாணவன் பரிதாபமாக பலியானார். பள்ளிப்பட்டு அருகே உள்ள பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் சுகுமார். நெசவுத் தொழிலாளியான இவரது மகன் தியாகராஜன் (19) ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், விடுமுறையில் வீட்டிக்கு வந்திருந்த தியாகராஜன் நேற்று முன்தினம் மாலை இருசக்கர வாகனத்தில் பாண்டரவேடு நோக்கிச் சென்றார்.
அப்போது வாணிவிலாசபுரம் காலனியிலிருந்து எம்சான்ட் நிரப்பிக் கொண்டு சென்ற டிராக்டர், முன்னால் சென்ற தியாகராஜன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவன் தியாகராஜனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவனை மாற்றினர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் தியாகராஜன் நேற்று உயிரிழந்தார். விபத்து குறித்து பொதட்டூர்பேட்டை உதவி காவல் ஆய்வாளர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.