*16 பயனாளிகளுக்கு ரூ.1.52 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
குன்னூர் : குன்னூரில், உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பல்வேறு துறைகளின் சார்பில், வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டு, 16 பயனாளிகளுக்கு ரூ.1.52 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார்.
நீலகிரி மாவட்டம், குன்னூரில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு பல்வேறு துறைகளின் சார்பில், வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு, குன்னூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் 16 பயனாளிகளுக்கு ரூ.1.52 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முதலாவதாக, மாவட்ட கலெக்டர் கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லநள்ளி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எடை, உயரம் மற்றும் கற்றல் திறன், உணவுப்பொருட்களின் இருப்பு குறித்தும், எல்லநள்ளி கிளை நூலகத்தில் தினசரி வரும் வாசகர்களின் எண்ணிக்கை தொடர்பான பதிவேடுகளையும், எல்லநள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், உபதலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில், பராமரிக்கப்படும் குடிநீர் வரி பதிவேடு, சொத்து வரி பதிவேடுகளை ஆய்வு செய்து, வரிப்பணம் செலுத்தாவர்களிடம் உடனடியாக வசூல் செய்யுமாறு சம்மந்தப்பட்ட அலுவலரிடம் அறிவுறுத்தி, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
குன்னூர் ஊராட்சி ஒன்றியம், உபதலை ஊராட்சியில் 14வது நிதிக்குழு மானியம் 2023-2024 பாறைக்குழியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் ஷட்டர் அமைத்து அங்குள்ள இயந்திரங்கள் வைப்பதற்கு ரூ.2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மேடையினையும், ஓட்டுப்பட்டறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அடிப்படை வசதிகள், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள், மருந்துகளின் இருப்பு, பரிந்துரை செய்யப்பட்ட கர்ப்பிணிகள் பதிவேடு பராமரிப்பு ஆகியவற்றினை பார்வையிட்டு, ரூ.1.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடப்பணிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து, குன்னூர் சகாயமாதா முதியோர் இல்லத்தை நேரில் ஆய்வு செய்து முதியோர்கள் எண்ணிக்கை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.
குன்னூர் மகளிர் காவல் நிலையத்தில் உள்ள வழக்குகளின் பதிவேடுகள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் நேரில் பார்வையிட்டும், குன்னூர் காந்திபுரம் இந்திரா நகர் பகுதியில் நடைபாதை அமைக்க நிலம் அளவீடு செய்யுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.
பின்னர் குன்னூர் காந்திபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார். குன்னூர் காந்திபுரம் இந்திரா நகர் பகுதியில் நடைபாதை அமைக்க நிலம் அளவீடு செய்யுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். பின்னர் குன்னூர் காந்திபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, 10 பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் புதிய குடும்ப அட்டைகளையும், 6 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 500 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார்.
பின்னர் குன்னூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில், உபதலை ஊராட்சியை சேர்ந்த துர்கேஷ் என்பவர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட உறுப்பினர் அட்டை வேண்டி மனு அளித்ததையொட்டி, அம்மனுவின் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலரிடம் உத்தரவிட்டார்.
பின்னர் குன்னூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அரசு துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலாமேரி, சமூக பாதுகாப்பு திட்டம் ராதாகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பிரம்ம வித்யா நாயகி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நந்தகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் குப்புராஜ், குன்னூர் நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி, குன்னூர் வட்டாட்சியர் ஜவஹர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.