மாமல்லபுரம்: சாலை விபத்தில் வலது கையை இழந்தவர், ‘ஊர் சுத்தம், கடல் சுத்தம்’ வலியுறுத்தி சென்னை முதல் தனுஷ்கோடி வரை 555 கிமீ விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இவரது முயற்சி பாராட்டு குவிந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (36). பான் கார்டு பதிவு செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 2003ம் ஆண்டு சென்னையில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்தபோது, விபத்தில் தனது வலது கையை இழந்தார். இருப்பினும் மனம் தளராமல் இடது கை மூலம் சைக்கிள் ஓட்டிச்சென்று பல்வேறு விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், தனது தோழியின் பிறந்த நாளை முன்னிட்டு ‘ஊர் சுத்தம், கடல் சுத்தம்’ என்ற விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை சென்னை முதல் தனுஷ்கோடி வரை 555 கிமீ தூரம் மேற்கொள்ள முடிவு செய்தார். அதன்படி பெசன்ட் நகரில் சைக்கிள் பயணத்தை தொடங்கிய தமீம் அன்சாரி நேற்று மாமல்லபுரம் இசிஆர் சாலை வழியாக தனுஷ்கோடிக்கு புறப்பட்டார். அப்போது, நமது ஊரையும், கடலையும் பாதுகாக்கவேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதுகுறித்து தமீம் அன்சாரி கூறுகையில், ‘இதுவரை 31 ஆயிரம் கிமீ தூரம் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளேன். கடந்தாண்டு குழந்தைகள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என ஊட்டியில் இருந்து சென்னை வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். இதையறிந்த நமது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் என்னை வரவேற்று பாராட்டினார். தற்போது தோழியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த பயணத்தை தொடங்கியுள்ளேன். இதை 3 நாளில் முடிக்க திட்டமிட்டுள்ளேன்’ என்றார். இவரது முயற்சிக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.