சேலம்: வார விடுமுறை நாளான நேற்று, ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும், பூங்காக்களில் குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். அதே போல், மேட்டூர் மற்றும் கொல்லிமலையிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மலைகளின் அரசன் என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாளான நேற்று, ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். அவர்கள் கிளியூர் நீர்வீழ்ச்சி, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், ரோஜா தோட்டம், சேர்வராயன் கோயில், கரடியூர், அண்ணா பூங்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று, இயற்கையை கண்டு ரசித்தனர். ஏற்காடு படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால், நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
இதேபோல, சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பூங்காவிற்கு நேற்று பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். காவிரியில் நீராடி விட்டு, அணைக்கட்டு முனியப்பனை தரிசித்து ஆடு கோழி பலியிட்டு பொங்கலிட்டனர். பின்னர், குடும்பத்துடன் அணை பூங்காவிற்கு சென்று விருந்துண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து அங்குள்ள மான் பூங்கா, முயல் பண்ணை, மீன் காட்சி சாலை, பாம்பு பண்ணை ஆகியவற்றை பார்த்து மகிழ்ந்தனர். சிறுவர்களும் பெரியவர்களும் ஊஞ்சலாடியும், சறுக்கி விளையாடியும் பொழுது போக்கினர். ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டை, சேலம் மாவட்டம் பூலாம்பட்டி இடையே விசைப்படகு போக்குவரத்து நடந்து வருகிறது. வார விடுமுறை நாளான நேற்று, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பூலாம்பட்டியில் குவிந்தனர். அவர்கள் குடும்பத்தினருடன் காவிரி ஆற்றில் விசைப்படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் மீன் வறுவல் கடைகள், ஓட்டல்களில் விற்பனை களை கட்டியது.
கொல்லிமலை: நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொல்லிமலையில் தற்போது இதமான சீசன் நிலவி வருகிறது. சமவெளி பகுதிகளில் வெயில் கொளுத்தி வருவதால், ஞாயிறு விடுமுறை தினமான நேற்று, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி, சினி பால்ஸ், சந்தனபாறை அருவிகளில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்த அவர்கள், அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மாசி பெரியசாமி கோயில்களில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர், தாவரவியல் பூங்கா, சிக்குப்பாறை காட்சிமுனையம், படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கண்டு ரசித்தனர்.