ஊட்டி: ஊட்டி ஏரியில் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள படகு இல்லத்திற்கு சென்று அங்கு படகு சவாரி மேற்கொள்கின்றனர். பருவ மழை தீவிரமடையாத நிலையில் கடந்த 3 மாதமாக ஏரியில் தண்ணீர் அளவு குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக ஊட்டியில் அவ்வப்போது பெய்த மழை காரணமாக ஏரியில் தண்ணீர் அளவு சற்று உயர்ந்து காணப்படுகிறது. இதனால் படகு சவாரி மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.