ஊட்டி: பல நாட்களுக்கு பின் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் துவங்கிய தென்மேற்கு பருவமழை பல நாட்கள் நீடித்தது. மேலும், அண்டை மாநிலமான கேரள மாநிலம் வயநாடு, நீலம்பூர் மற்றும் கள்ளிக்கோட்டை போன்ற பகுதிகளில் மழை நீடித்தது. மேலும், வயநாட்டில் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டு 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதனால், அங்கிருந்து ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது.
தற்போது, கேரள மாநிலத்தில் மழை சற்று குறைந்துள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக ஊட்டிக்கு வரும் கேரள மாநில சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக காணப்படுகிறது. வார விடுமுறை நாளான நேற்று ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால், பல நாட்களுக்கு பின் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் காணப்பட்டனர். இதனால், வியாபாரிகள் மற்றும் ஓட்டல், காட்டேஜ் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.