கம்பம்: கனமழை, கட்டுப்பாடுகள் எதிரொலியாக கேரளாவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழக – கேரள எல்லையில் தேனி மாவட்டம், கம்பம் உள்ளதால், கம்பம் அருகே உள்ள சுருளி அருவி மற்றும் மேகமலை ஆகிய சுற்றுலாத்தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள், அப்படியே கேரள எல்லையான குமுளி, தேக்கடி, வாகமண் மற்றும் ராமக்கல்மேடு ஆகிய சுற்றுலாத்தலங்களையும் கண்டுகளித்து செல்கின்றனர். தற்போது இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை குறைந்த நிலையில் சுற்றுலாப்பயணிகளின் வருகையும் வெகுவாக குறைய தொடங்கியுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூனில் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். ஆனால் இந்தாண்டு வழக்கத்தைவிட முன் கூட்டியே மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இடுக்கி மாவட்டத்தில் பருவமழை துவங்கியவுடன் ஒரு சில நாட்கள் பலத்த மழை பெய்தது. அதன்பிறகு மழை குறைந்த நிலையில் ஜூன் இறுதியில் மழை வலுவடைந்தது. ஜூலையிலும் இடைவெளி விட்டு பலத்த மழை பெய்தது. இருப்பினும் ஜூன், ஜூலை மாதங்களில் மழை சராசரி அளவில் 26 சதவிகிதம் குறைவாக பதிவானது. இடுக்கி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் சராசரி 1,593.9 மி.மீ., மழை பெய்ய வேண்டும்.
ஆனால் இந்தாண்டு அதே கால அளவில் 1186.6 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது. இதனால் கேரளாவில் கடந்த இரண்டு மாதங்களில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது தென்மேற்கு பருவமழை இடுக்கி மாவட்டத்தில் மிகவும் குறைவு எனக் கூறப்படுகிறது. இருப்பினும், கேரளாவில் பரவலாக கனமழை பெய்ததன் எதிரொலியாக, இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி, வாகமண், ராமக்கல் மேடு போன்ற சுற்றுலா தளங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தென்மேற்கு பருவமழை துவங்கிய பிறகு வானிலை ஆய்வு மையத்தின் மழை முன்னெச்சரிக்கை, இரவு நேர பயணம், சுற்றுலா பகுதிகளில் கட்டுப்பாடுகள் ஆகியவைகளால், சுற்றுலாப்பயணிகள் வருகை குறைய காரணம் எனக் கூறப்படுகிறது.
மேலும் இடுக்கி மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில் கோடை சுற்றுலா சீசனான மே மாதம் இடுக்கி மாவட்டத்திற்கு 4,79,979 பயணிகள் வருகை தந்தனர். ஜூனில் 2,67,472, ஜூலையில் 1,26,015 என அடுத்தடுத்த மாதங்களில் குறைந்துள்ளது. வாகமண் அட்வெஞ்சர் பூங்காவுக்கு கடந்த மே மாதம் 1,43,369 பயணிகள் வருகை தந்தனர். அது ஜூலையில் 26,918 பயணிகளாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளா வரும் சுற்றுலாப்பயணிகள் குறைந்துள்ளதால், கேரள சுற்றுலாத்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.