துரைப்பாக்கம்: ஈஞ்சம்பாக்கத்தில் நேற்றிரவு ஒரு பிரபல பொழுதுபோக்கு மையத்தில் இருந்த ராட்சத ராட்டினத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அதில் இருந்த சுற்றுலா பயணிகள் 3 மணி நேரம் அந்தரத்தில் தொங்கினர். பின்னர் அவர்களை ராட்சத லிப்ட மூலம் தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். இதுகுறித்து பொழுதுபோக்கு மையத்துக்கு நீலாங்கரை போலீசார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மேலும், இன்று காலை அந்த பொழுதுபோக்கு மையத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பிரபல விஜிபி பொழுதுபோக்கு மையம் உள்ளது. இம்மையத்தில் செங்குத்தாக மேலே சென்று, கீழே இறங்கும் ஒரு ராட்சத ராட்டினத்தில் 30 பேர் செல்லும் வகையில் அமைந்துள்ளது.
இந்நிலையில், இந்த ராட்சத ராட்டின இயந்திரத்தில் நேற்று 8 சிறுவர்கள், 10 பெண்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஏறியுள்ளனர். இரவு 7 மணியளவில் 30 பேருடன் மேலேறிய ராட்சத ராட்டினம், சுமார் 160 அடி உயரத்தில் சென்றபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்தரத்திலேயே தொங்கியபடி நின்றது. இதனால் ராட்டினத்தில் இருந்த 30 பேரும் அலறியடித்து கூச்சலிட்டனர். மேலும், பொழுதுபோக்கு மையத்தில் இருந்த அவர்களின் உறவினர்களும் அலறினர். இதைத் தொடர்ந்து, அந்த ராட்சத ராட்டினத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறை பொழுதுபோக்கு மைய ஊழியர்கள் சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் ராட்சத ராட்டினத்தில் சுற்றுலா பயணிகள் அந்தரத்தில் தொங்கியபடி அலறி சத்தமிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் நீலாங்கரை போலீசார் மற்றும் துரைப்பாக்கம், கிண்டி, நீலாங்கரை பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். சுமார் 160 அடிக்குமேல் ராட்சத ராட்டினத்தில் தொங்கிய 30 பேரையும் ராட்சத பிராண்டோ லிப்ட் இயந்திரம் மூலமாக தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கு பின் இரவு ராட்சத ராட்டினத்தில் இருந்த 30 பேரையும் தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்நிலையில், விஜிபி பொழுதுபோக்கு மையத்தில் உள்ள இயந்திரங்களின் நிலை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து உரிய அறிக்கை அளிக்கும்படி நீலாங்கரை போலீசார் இன்று காலை நோட்டீஸ் வழங்கினர்.
மேலும், அந்த பொழுதுபோக்கு மையத்தில் உள்ள அனைத்து இயந்திரங்களின் நிலை, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள், அதன் பயன்பாட்டு காலக்கெடு குறித்து உரிய ஆவணங்கள் உள்ளதா, சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா என்பதை வருவாய்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால், விஜிபி பொழுதுபோக்கு மையம் இன்று தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. வருவாய் துறையினரின் ஆய்வுக்கு பிறகே, இந்த பொழுதுபோக்கு மையம் திறக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.