Monday, March 4, 2024
Home » ஆங்கில புத்தாண்டு, தொடர் விடுமுறையால் ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆங்கில புத்தாண்டு, தொடர் விடுமுறையால் ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

by Ranjith

சேலம்: ஆங்கில புத்தாண்டு, தொடர் விடுமுறையையொட்டி ஏற்காடு மற்றும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக, ஏற்காடு மலை பிரதேசத்திற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஏற்காட்டில் ஏரி, படகு இல்லம், மான்பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ஐந்திணை பூங்கா, தாவரவியல் பூங்கா, அண்ணா பூங்கா, சேர்வராயன் கோயில், பக்கோடா பாயின்ட் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் இடங்களாகும். கோடை விடுமுறை மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

கடந்த 23ம் தேதி முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால், பலர் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இன்று ஆங்கில புத்தாண்டு என்பதால் அதை கொண்டாட பொதுமக்கள் அவரவர் சொந்த ஊருக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்கின்றனர். ஏற்காட்டிற்கு நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். தாவரவியல் பூங்கா, ஐந்திணை பூங்கா, லேடீஸ் சீட், பக்கோடா பாயின்ட் உள்ளிட்ட பகுதிகளை கண்டுகளித்தனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் தள்ளுவண்டி கடைகளில் பலகாரங்கள் விற்பனை களைகட்டியது. ஓட்டல், ரெஸ்டாரண்டுகளில் சுற்றுலா பயணிகளின் விற்பனை அதிகரித்தது. அதேபோல், இடைப்பாடி அருகே பூலாம்பட்டி காவிரி கரையில் பொழுது போக்கி மகிழ்ந்த சுற்றுலா பயணிகள், விசைப்படகில் உல்லாச சவாரி செய்து, இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு நாள்தோறும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஞாயிறு மற்றும் புத்தாண்டு விடுமுறையையொட்டி, ஒகேனக்கலுக்கு நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் குடும்பத்தினருடன் பரிசலில் சவாரி செய்து காவிரியின் அழகை கண்டு ரசித்தனர். ஒகேனக்கல் காவிரி ஆறு, மெயினருவி உள்ளிட்ட பகுதியில் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். இதனால், ஒகேனக்கல்லில் நேற்று திரும்பிய பக்கம் எல்லாம் மனித தலைகளாக தென்பட்டது.

You may also like

Leave a Comment

one + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi