கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்று இதமான குளிருடன், சாரல் மழை பெய்து நகர் முழுவதும் மஞ்சி (பனி) படர்ந்து, சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தது. விடுமுறை நாளான நேற்று ஏராளமானோர் குவிந்து நட்சத்திர ஏரியில் ஜாலியாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலாத் தலத்தில் விடுமுறை தினங்களில் கூட்டம் களைகட்டும். நகரில் நேற்று காலை முதல் இதமான குளிரும், சாரலும் பெய்தது. நகர் முழுவதும் மஞ்சி படர்ந்து மனதைக் கவர்ந்தது.
இந்த ரம்மியமான சூழலை அனுபவிக்க விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் நகரில் குவிந்தனர். நகரில் உள்ள பைன் பாரஸ்ட், தூண் பாறை, குணா குகை, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களை கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள், நட்சத்திர ஏரியில் இயற்கை அழகை ரசித்தபடி ஜாலியாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். நேற்று அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதை தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருவதாலும் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.