ஊட்டி : கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு சம்பவம் காரணமாக ஊட்டி வரக்கூடிய கேரள சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை முற்றிலும் குறைந்துள்ளது.சுற்றுலா நகரமான ஊட்டியில் ஆண்டு முழுவதும் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சீசன் சமயங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு குவிவது வழக்கம்.
சீசன் இல்லாத சமயங்களில் வார இறுதி நாட்களில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்கள் களைகட்டி காணப்படும். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் அண்டை மாநிலங்களாக விளங்கக்கூடிய கேரளாவின் வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகாவின் குண்டல்பேட், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவார்கள்.
வயநாட்டில் இருந்து அதிகாலை புறப்பட்டால் மூன்றரை மணி நேரத்தில் ஊட்டிக்கு வந்து விடலாம். இதேபோல் மைசூரில் இருந்தும் வந்து விடலாம். இதனால் வார இறுதி நாட்களில் வயநாடு மற்றும் மைசூரில் இருந்து அதிகாலை புறப்பட்டு, ஊட்டி வந்து அனைத்து சுற்றுலா தலங்களை பார்த்து மாலையில் திரும்பி செல்வதை சுற்றுலா பயணிகள் வழக்கமாக வைத்திருந்தனர். இதனால் ஊட்டி நகரில் கேரள, கர்நாடக மாநில பதிவெண் கொண்ட வாகனங்களை அதிகம் காண முடியும். தற்போது கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
இம்மழை காரணமாக கடந்த 30ம் தேதியன்று வயநாட்டில் முண்டகை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் வரலாறு காணாத நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 350க்கும் மேற்பட்டோர் பாறைகள் மற்றும் மண்ணில் புதையுண்டு உயிரிழந்தனர். இக்கொடூர சம்பவம் காரணமாக கேரள மாநிலமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இச்சம்பவத்தால் வயநாட்டில் இருந்து ஊட்டி வரக்கூடிய கேரள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்துள்ளது.
வார விடுமுறை நாளான நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் கேரள சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது. சில கேரள சுற்றுலா பயணிகளே ஊட்டிக்கு வந்திருந்தனர். அதே சமயம் கர்நாடக சுற்றுலா பயணிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளை காண முடிந்தது. மேலும் நகரில் வாகன போக்குவரத்தும் குறைவாகவே இருந்தது.