ஏற்காடு: கிருஷ்ண ஜெயந்தி தொடர் விடுமுறையையொட்டி, ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். குடும்பத்தோடு சுற்றுலா வந்தவர்கள் ஏரியில் படகு சவாரி செய்து குதூகலித்தனர். சேலத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஏற்காட்டிற்கு, வார விடுமுறை தினங்களில் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். நாளை(26ம் தேதி) கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையையொட்டி, நேற்று முன்தினம் முதலே ஏராளமானோர் சுற்றுலா வந்து குவிந்தனர். சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து மட்டுமின்றி அண்டைய மாவட்டங்களிலிருந்தும், சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் குடும்பத்தோடு சுற்றுலா வந்திருந்தனர். இதனால், அனைத்து இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஏற்காட்டில் உள்ள காட்சிமுனை பகுதிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள், அங்கிருந்தபடி பள்ளத்தாக்கின் இயற்கை அழகையும், மலை முகடுகளில் தவழ்ந்து சென்ற மேகக் கூட்டங்களையும் ரசித்தபடி விடுமுறையை கழித்தனர்.
இதே போல், அண்ணா பூங்கா மற்றும் ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களிலும் சுற்றுலா பயணிகள் மிகுதியாக காணப்பட்டனர். ஏற்காடு ஏரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனிடையே, ஏற்காட்டில் நேற்று பகலில் வழக்கத்தை விட குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது. அவ்வப்போது மேகக் கூட்டங்கள் சாலையில் தவழ்ந்தவாறு சென்றது, சுற்றுலா பயணிகளுக்கு உற்சாகத்தை அளித்தது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்பட ஏற்காட்டில் கடைகள் பலவற்றிலும் விற்பனை களை கட்டியது. சுற்றுலா பயணிகள் கார்-வேன்கள், இருசக்கர வாகனங்களில் வந்திருந்ததால், சேலம் அடிவாரம்- ஏற்காடு மலைப்பாதை, குப்பனூர்-ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து மிகுந்து காணப்பட்டது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஏற்காடு மலையிலும் சுற்றுலா இடங்களுக்கு செல்லக்கூடிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.