தண்டராம்பட்டு : ஞாயிறு விடுமுறை தினமான நேற்று சாத்தனூர் அணையை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.திருவண்ணாமலை மாவட்டத்தின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக சாத்தனூர் அணை அமைந்திருக்கிறது.
இந்த அணை பொன் விழா கண்ட சிறப்புக்குரியது. எழில் நிறைந்த மலர் பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், படகு சவாரி, மீன் கண்காட்சி, முதலைப் பண்ணை என சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்கள் நிறைந்துள்ளன. எனவே, விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் சாத்தனூர் அணைக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் சாத்தனூர் அணையை சுற்றி பார்க்க ஏராளமான மக்கள் வந்திருந்தனர். அங்குள்ள ஆதாம் ஏவாள் பூங்கா, தொங்கு பாலம், காந்தி மண்டபம், அறிவியல் பூங்கா, டைனோசர் பார்க், முதலைப்பண்ணை, பறவைகள் கூண்டு, கலர் மீன்கள் கண்காட்சி ஆகியவற்றை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.
மேலும், அங்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தால் பிடிக்கப்படும் மீன்களை வாங்கி அங்கே குடும்பத்தினருடன் சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவ- மாணவிகள் தங்களது ஆசிரியர்களுடன் சாத்தனூர் அணையை சுற்றி பார்க்க வந்திருந்தனர்.
மேலும், விவசாய பாசனத்திற்காக வலது புறம் மற்றும் இடதுபுறம் கால்வாய் வழியாக அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 520 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 112.20 அடியாக உள்ளது.