*இன்றுடன் நிறைவடைகிறது
ஊட்டி : கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான 20-வது ரோஜா கண்காட்சியை காண கடந்த 2 நாட்களில் ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வந்த வண்ணம் உள்ளனா். இந்நிலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான 20-வது ரோஜா கண்காட்சி நேற்று முன்தினம் ஊட்டி ரோஜா பூங்காவில் துவங்கியது.
இக்கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிட்டனா். ரோஜா பூங்கா மட்டுமின்றி தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. இரண்டு நாட்கள் நடந்த ரோஜா கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனா்.
கண்காட்சியின் இரண்டாவது நாளான நேற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வெகுவாக அதிகரித்தது. இம்முறை ரோஜா கண்காட்சியில் கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பை மையக்கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், 22 அடி உயரத்தில் 80 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு அமைக்கப்பட்ட 2 டால்பின் மீன்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. அதன்முன்பு நின்று புகைப்படம் எடுத்து கொள்ள அதிக ஆர்வம் காட்டினர். மேலும் 1.20 லட்சம் பல்வேறு வண்ண ரோஜா மலர்களால் ஆன அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான ஆலிவ் ரிட்லி ஆமை, பென்குயின், கடல் பசு, கடல் குதிரை, நட்சத்திர மீன் ஆகியவையும், குழந்தைகளை கவரும் வண்ணம் கடல் கன்னி, கிளொவன் மீன், கடற்சிப்பி போன்ற உயிரினங்களும் காட்சிப்படுத்தப்பட்டது.
இவற்றையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இதுதவிர பூங்காவில் பாத்திகளில் நடவு செய்யப்பட்டுள்ள பல்வேறு வண்ண ரோஜா மலர்களையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
இதேபோல, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள், நகருக்கு வெளியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களிலும் கூட்டம் காணப்பட்டது. இதனிடையே ரோஜா கண்காட்சிக்கு சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ரோஜா பூங்கா செல்லும் சாலை உட்பட நகரின் சில இடங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசலை காவல்துறையினர் உடனுக்குடன் சீரமைத்தனர். கனரக வாகனங்கள் நகருக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பார்க்கிங் தளத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து போக்குவரத்துக்கழக சர்க்கியூட் பஸ் மூலம் சுற்றுலா தலங்களுக்கு சென்றனர். மூன்று நாட்கள் நடைபெற்ற ரோஜா கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.
நாய்கள் கண்காட்சி நிறைவு சிறந்த நாய்களுக்கு பரிசு, சான்றிதழ்
சவுத் இந்தியா கேனல் கிளப் சாா்பில் 135 மற்றும் 136-வது நாய்கள் கண்காட்சி மற்றும் போட்டிகள் கடந்த 9ம் தேதி ஊட்டி அரசு கலை கல்லூரி மைதானத்தில் துவங்கியது. இதில் கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி, புனே, மும்பை, தமிழ்நாடு, கா்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியா முழுவதிலும் இருந்து நாய் வளா்ப்போா் தங்களின் நாய்களை போட்டிகளுக்கு அழைத்து வந்திருந்தனா்.
காவல்துறையை சோ்ந்த நாய்களும் இதில் பங்கேற்றன. இதில் ஜெர்மன் செப்பர்டு, டாபர்மேன், கோல்டன் சைபீாியன் ஆஸ்கி, பெல்ஜியம் செப்பர்டு, பீகில், லேபர்டார் என மொத்தம் 56 வகைகளில் 450 நாய்கள் பங்கேற்றன.
முதல் நாளில், நாய்க்கு கீழ்ப்படிதல், அணிவகுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. நாய்களுக்கான கண்காட்சி மற்றும் அவைகளின் திறமைகள் குறித்து போட்டிகள் நடந்தது. தொடா்ந்து கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. கண்காட்சியின் சிறந்த நாய்க்கான போட்டி நடந்தது.
இதில் வெற்றி பெற்ற நாய்களுக்கு கேடயங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மூன்று நாட்கள் நடந்த நாய் கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.