காஞ்சிபுரம்: தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், உலக சுற்றுலா தின கொண்டாடத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருது வழங்கி வருகிறது. இந்த விருது சுற்றுலா தொழில் முனைவோரையும், சுற்றுலா தொடர்புடைய செயல் பாடுகளை செயல்படுத்தும் சுற்றுலா தொழில் புரிவோரையும் ஊக்குவிக்கும். விருதுகள் பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுபெற எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் நேற்று நடந்தது.
காஞ்சி மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். இதில், காஞ்சிமாவட்டத்தை சிறந்த சுற்றுலா பகுதியாக மாற்ற எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் காஞ்சிபுரத்தில் சுற்றுலா பகுதிகளை ஒருங்கிணைத்து இணைய தளத்தை உருவாக்கி அதன் மூலம் சுற்றுலா பகுதியாக மாற்றும் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு ஆலோசிக்கப்பட்டது. இதில், உதவி சுற்றுலா அலுவலர் சரண்யா மற்றும் காஞ்சிபுரம் விடுதி உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள், சுற்றுலா அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.