சென்னை: சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் பணித்திறனாய்வு கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. துறை செயலாளர் மணிவாசன், சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் முன்னிலை வகித்தனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வந்த மாவட்ட சுற்றுலா அலுவலர்களிடம் தற்போது நடந்து வரும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சுற்றுலா தலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மற்றும் புதிய சுற்றுலா தலங்களை கண்டறிந்து அந்த இடங்களில் உலக தரத்திலான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஆலோசிக்கப்பட்டது. மலையேறுதல், மலைப்பகுதிகளில் தங்குதல், நீர் சறுக்கு, அலைச்சறுக்கு மேற்கொள்ளுதல் உள்ளிட்ட புதிய அனுபவங்களை மேற்கொள்ள விரும்புகின்றனர். இவை தற்போது வளர்ச்சியடைந்து வருகின்றன.
இந்தியாவிலேயே தமிழ்நாடு, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவர்ந்து வருகிறது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான விமான போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தமிழ்நாட்டில் முழுமையாக உள்ளன. தமிழ்நாட்டின் மாமல்லபுரம் கடற்கரை கோயில், ரதங்கள் மற்றும் சிற்பங்கள், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், ஐராவதீஸ்வரர் கோயில், தஞ்சை பெரிய கோயில் மற்றும் நீலகிரி பாரம்பரிய மலை ரயில் ஆகியவை யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, சுற்றுலா ஆணையரக உயர் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உயர் அதிகாரிகள், அனைத்து மாவட்ட சுற்றுலா அலுவலர்கள் மற்றும் சுற்றுலாத்துறை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.