சென்னை: சென்னை அசோக் நகர் சவுந்தரபாண்டியன் தெருவை சேர்ந்தவர் இசக்கி சுப்பையா. அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏவான இவர், தனது மகன் இசக்கி துரை (31) மற்றும் குடும்பத்துடன் கடந்த 11ம் தேதி அந்தமானுக்கு சுற்றுலா சென்றுள்ளார். 12ம் தேதி மாலை 6.20 மணிக்கு மர்ம நபர் ஒருவர் அத்துமீறி இசக்கி சுப்பையா வீட்டிற்க்குள் நுழைந்துள்ளார். பணிப்பெண் இதை பார்த்து மர்ம நபரிடம் யார் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் பதில் சொல்லாமல் வீட்டின் மேல் தளத்திற்குள் சென்றுவிட்டார். உடனே சம்பவம் குறித்து அந்தமானில் உள்ள இசக்கி துரைக்கு தகவல் அளித்தார். அவர் தனது செல்போன் மூலம் வீட்டின் சிசிடிவியை பார்த்து, மர்ம நபர் வீட்டின் மொட்டை மாடியில் இருப்பதாக பணிப்பெண்ணிடம் கூறினார். உடனே, பணிப்பெண் அங்கு சென்று, மர்ம நபரை வீட்டில் இருந்து மாலை 6.42 மணிக்கு வெளியேற்றியுள்ளார்.
இந்நிலையில் மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்த சம்பவம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ மகன் இசக்கி துரை 13ம் தேதி இரவு 8.30 மணிக்குத்தான் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மர்ம நபர் உள்ளே புகுந்து ஒரு நாள் கழித்து தான் அவர் புகார் அளித்துள்ளார். அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா வசித்து வரும் வீடு இதற்கு முன்பு அவர் அமமுகவில் இருந்த போது, டி.டி.வி.தினகரன் நடத்தும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகமாக செயல்பட்டது. எனவே வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் எதற்காக வந்தார். ஒரு நாள் கழித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதால், அதன் பின்னணி உள்ள மர்மங்கள் என்ன என்பது குறித்து போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.