ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள பைன்பாரஸ்ட் பகுதி சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களை கட்டியுள்ளது. ஊட்டி – கூடலூர் சாலையில் தலைக்குந்தா அருகே காமராஜர் சாகர் அணை உள்ளது. இந்த அணையின் ஒரு பகுதியில் பைன் மரங்கள் நிறைந்த வனப்பகுதி உள்ளது. வனங்களுக்கு நடுவே உள்ள இந்த பைன் பாரஸ்ட் பகுதியை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம்.
இதனால் இந்த பகுதியில் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.இங்கு வரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் காமராஜர் அணை கரையோரத்தில் குதிரை சவாரியும் நடத்தப்படுகிறது. பைன் பாரஸ்ட் நடுவே புகைப்படம் எடுத்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதமாக பெய்து வரும் மழை மற்றும் கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஊட்டியில் வெயிலான காலநிலை நிலவிய நிலையில்,அடுத்த இரு நாட்கள் வார விடுமுறை என்பதால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வரத்துவங்கியுள்ளனர். கூடலூர் வழியாக வர கூடிய சுற்றுலா பயணிகள் பைன்பாரஸ்ட் பகுதிக்கு சென்று பாா்வையிட்டு வருகின்றனர்.இதனால் அப்பகுதி களை கட்டியுள்ளது. காமராஜா் சாகர் அணையை ஒட்டிய பகுதியில் நடைபயணம் மேற்கொண்டு மகிழ்ந்து வருகின்றனர்.