சென்னை: சுற்றுலாத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் 38 தொழில் நிறுவனங்கள், அரசுத்துறைகள், சுற்றுலா செயல்பாட்டாளர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்தரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கினார்கள்.
சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் – 2024 வழங்கும் விழா சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்தரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில் சுற்றுலா விருதுகள் வழங்கும் விழா இன்று (19.11.2024) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் 38 தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், டிராவல் நிறுவனங்கள், அரசுத்துறைகள் உள்ளிட்ட சுற்றுலா செயல்பாட்டாளர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கி கௌரவித்தார்கள். இந்த நிகழ்ச்சியில், சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் தலைவர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் டாக்டர்.சந்தரமோகன் B இ.ஆ.ப., சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப., ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்தரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டை உலக அளவில் கொண்டு செல்வதில் சிற்பியாக திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971 ஆம் ஆண்டில் உருவாக்கி பொதுமக்கள் சுற்றுலா சென்று வர சுற்றுலா பேருந்து, சுற்றுலாத்தலங்களில் உணவகம், ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், சுற்றுலா பயணத்திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்தி நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு சுற்றுலாத்துறையை விளங்கச் செய்தார்கள்.
தமிழ்நாட்டை உலகின் முக்கிய இடமாக உருவாக்குவதை லட்சியமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான திட்டங்களை தீட்டி, அவற்றை செவ்வனே செயல்படுத்தி வருகின்றார்கள். வருடாந்திர மாநில மொத்த உற்பத்தியில் குறைந்தது 12 சதவீதம் சுற்றுலாத்துறை பங்களிப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும். சுற்றுலா மற்றும் அதன் துணைத் தொழில்கள் மூலம் தமிழகத்தில் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். சுற்றுலாத்துறையில் ரூ.20,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சுற்றுலா மற்றும் அதன் துணைத் தொழில்களில் ஈடுபட்டு வரும் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு மேல் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும்.
ஏற்கனவே சுற்றுலா வழிகாட்டிகளுக்கான நெறிமுறைகள் பதிவுத்திட்டம் – 2023 தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா வழிகாட்டிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் “தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி நெறிமுறைகள் பதிவு திட்டம்-2023“ அறிமுகப்படுத்தி, இத்திட்டத்தின்கீழ் சுற்றுலா வழிகாட்டிகள் – பொது, நிபுணர் மற்றும் மொழியியல் வழிகாட்டி என மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு வருகைப் புரியும் சுற்றுலா பயணிகளுக்கு தரமான சேவைகளை வழங்குவதற்கும் இனிமையான அனுபவங்கள் வழங்குவதை உறுதி செய்யவும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை, “தமிழ்நாடு சுற்றுலாப் பயண ஏற்பாட்டாளர்கள், பயண முகவர்கள், சுற்றுலாப் பேருந்து இயக்குபவர்களுக்கான திட்டம்- 2023″ ஐ அறிமுகப்படுத்திவுள்ளது.
முதலமைச்சர் வழிக்காட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு சான்றாக தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே தமிழ்நாடு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையில் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. மேலும் மருத்துவ சுற்றுலா மற்றும் ஆன்மீக சுற்றுலா மூலமாக தமிழ்நாட்டிற்கு உடல்நிலை குறைவால் சிகிச்சைக்கு வரும் உலக நாடுகளிள் ஆசிய, ஐரோப்பா போன்ற அயல் நாடுகளில் இருந்து மருத்துவ ரீதியிலான அணுகுமுறைக்கும் சிகிச்சைக்கும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் சுற்றுலாத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு (மருத்துவத்துறை) இணைந்து மருத்துவ சுற்றுலா நடத்தப்பட இருக்கிறது.
மேலும், தமிழகத்தில் வேறெந்த மாநிலத்தில் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டின் புராதான கோயில்களை சார்ந்து ஆன்மீக சுற்றுலா மிகவும் பிரபலமானதாக உள்ளது உதாரணமாக பழனி, ராமேஷ்வரம் மற்றும் திருச்செந்தூர் போன்ற கோவில்கள் ஆன்மீக சுற்றுலா தலங்களாக திகழ்ந்து வருகிறது. இதனை தொடர்ந்து சுற்றுலாத்தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்குவதை ஊக்குவிப்பதற்காகத்தான் இன்றைய தினம் சுற்றுலா செயல்பாட்டாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து சுற்றுலா செயல்பாட்டாளர்களும் சிறப்பாக சேவையை வழங்கி தமிழ்நாட்டை உலக சுற்றுலா பயணிகளின் விருப்பமான இடமாக உருவாக்க வேண்டும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் சுற்றுலா விருதுகள் வழங்கி தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்கள் பார்வையாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.